சென்னை:  தமிழகத்தில் இன்ஃபுளுயன்சா (H1N1) காய்ச்சலால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 965 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு இல்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் குழந்தைகளிடையே காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இது பருவகால நோய் என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இருந்தால், காய்ச்சல் அதிகரிப்பு காரணமாக, மருத்துவமனைகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதற்கிடையில், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுவது இல்லை என்றும், மருந்துதட்டுப்பாடு என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், “எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர், பின்னர் மருத்துவமனை  வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு center of excellence for rare diseases என்கின்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர்,  பருவ மழைக்கு முன்னால் வரும் காய்ச்சல் பாதிப்பு குழந்தைகளுக்கு வரக்கூடியதுதான். இன்று ஒரே நாளில் மட்டும் 47 பேர் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றவர்,  தமிழகத்தில் 965 பேர் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.

பாமக தலைவர் கூறுவதுபோல,  தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியம் இல்லை என்று மறுத்தவர், குழந்தைகளுக்கு இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அனுப்பக் கூடாது. பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், அரசின் மீது உள்ள கோபத்தால் மருந்து தட்டுப்பாடு என்ற குற்றச்சாட்டை ஒரு சிலர் கூறி வருகின்றனர் என்றும், தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.