டில்லி

ஜாமீனில் வெளி வந்த குற்றவாளியை வேறு குற்றத்தின் கீழ் கைது செய்ய ஜாமீன் அளித்த நீதிமன்ற அனுமதி தேவை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு கிரிமினல் வழக்கில் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்த போது வேறு ஒரு குற்றச்சாட்டில் அவரை சேர்த்து கைது செய்தது குறித்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்தது. அந்த வழக்கில் மனுதாரரருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் கேஎம் ஜோசப் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில், “புதிய குற்றச்சாட்டில் ஒரு குற்றவாளி சேர்க்கப்படும் போது அவர் தனது முந்திய ஜாமீனை ரத்து செய்ய விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு புதியதாக மற்றொரு ஜாமீனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த உரிமை குற்றவாளிக்கு மட்டுமே உள்ளது.

ஆகையால் அவருடைய ஜாமீன் ரத்து ஆகாதவரை புதிய குற்றத்தின் கீழ் அவரை கைது செய்ய முடியாது. அவ்வாறு கைது செய்ய வேண்டும் எனில் ஏற்கனவே ஜாமீன் வழங்கிய நீதிமன்றத்துக்கு மனு செய்து அனுமதி பெற்ற பிறகே அந்த நபரை மற்றொரு வழக்கில் கைது செய்யமுடியும். அதுவரை அவரை கைது செய்யக் கூடாது” என அறிவிக்கப்பட்டுள்ளது.