சென்னை: கடந்த 1911-ம் ஆண்டு வருவாய் ஆவண பதிவுகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை முழுமையாக சர்வே செய்து, அதை தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிட்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் 38% சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பதாக கணக்கெடுப்பு காட்டுகிறது என்று தமிழக அரசு 2024ம் ஆண்டு ஜனவரியில், தேசிய பசுமை தீர்பாயத்திடம் கூறியிருந்தது. இந்த ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில், . கிரேட்டர் சென்னை மாநகராட்சியின் வசம் 173.56 ஹெக்டேர், தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ரயில்வே முறையே 163.25 ஹெக்டேர் மற்றும் 46.92 ஹெக்டேர்களை ஆக்கிரமித்துள்ளன. ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்கா ஈரநிலத்தில் 5.85 ஹெக்டேர் பகுதியை ஆக்கிரமித்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ராம்சார் சதுப்பு நிலப்பகுதியாக பாதுகாக்கப்பட்டு வரும் சென்னைபள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பெரும்பாக்கம் சதுப்பு நிலப்பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில், சாலை அமைக்கப்பட்டு வருவது குறித்தும், இதற்காக அங்குள்ள சதுப்பு நில நீர்நிலைகளில் டன் கணக்கில் கட்டுமானப் பொருள்கள் கொட்டப்பட்டு வருவது குறித்தும் கடந்தாண்டு ஜூன் மாதம் வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறது.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு, சதுப்பு நிலத்தில் தனியார் நிறுவனம் சாலைஅமைத்து வருவது குறித்து முழுமையாக ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி சதுப்பு நில ஆணையம் நடத்திய ஆய்வில் தனியார் கட்டுமான நிறுவனம் பட்டா நிலத்தில் உள்ள தங்களது கட்டுமானத்துக்காக சதுப்பு நிலப் பகுதியை ஆக்கிரமித்து சாலை அமைத்து வருவது கண்டறியப்பட்டது.
அதையடுத்து, தென்மண்டல தீர்ப்பாயம், தனியார் கட்டுமானநிறுவனம் தனது கட்டுமானங்களை பட்டா நிலத்தில் மேற்கொண்டாலும், சதுப்பு நிலப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் கட்டுமானங்களை மேற்கொள்ள அனுமதியளிக்கும் முன்பாக சிஎம்டிஏ, சதுப்பு நில ஆணையத்திடம் ஆலோசித்து இருக்க வேண்டும்.
சதுப்பு நிலத்தில் சாலை அமைப்பது என்பது சட்டவிரோதமானது மட்டுமி்ன்றி, சுற்றுச்சூழலுக்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதுதொடர்பாக சிஎம்டிஏ நிர்வாகம் விளக்கமளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்திருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் தென்மண்ட தீர்ப்பாயம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவி்ல், ‘‘கடந்த 1911-ம் ஆண்டு வருவாய் பதிவுகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை முழுமையாக சர்வே செய்து, அதைதற்போதைய சதுப்பு நிலப்பரப்புடன் ஒப்பிட்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.