சென்னை:
கடந்த 2012-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் ஒன்றாக இணைக்கப்பட்டபோது, அண்ணா பல்கலைக்கழ கம் கிளைகளில் பல நியமனங்கள் நடைபெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய குழு, பேராசியர்கள் மற்றும் ஊழியர்கள் 135 பேரின் நியமனங்கள் விதிமுறைப்படி நடைபெறவில்லை என்றும், அவர்களது நியமனங்கள் செல்லாது என்றும் அறிவித்து உள்ளது. இது தொடர்பான அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் பேரறிஞர் அண்ணாவால் 1978ம் ஆண்டு அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்தியாவில் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழும் அண்ணா பல்கலைக்கழகம் திமுக ஆட்சியின்போது, 2007 ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக 6 கிளைகளாக பிரிக்கப்பட்டு, மண்டல அலுவலகங்களை உருவாக்கியது.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – மண்டல அலுவலகம், திருச்சி , அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – மண்டல அலுவலகம், கோயம்புத்தூர், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – மண்டல அலுவலகம், மதுரை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – மண்டல அலுவலகம், திருநெல்வேலி என நிறுவப்பட்டது. இந்த மண்ட அலுவலகங்களுக்கு தேவையான பேராசியர் உள்பட பலர் நியமிக்கப்பட்டது.
பின்னர் 2011ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், அண்ணா பல்கலைக்கழகத்தின் 6 மண்டலங்களையும் மீண்டும் இணைத்து ஒரே பல்கலைக்கழகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கான சட்ட மசோதா 2011 ஆம் ஆண்டு செப்டம்பா் 14 ந்தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, உள்ளிட்ட மாவட்டங்களை தலைமையாக கொண்டு செயல்பட்டு வந்த அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2012-ம் ஆண்டு மீண்டும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒன்றாக இணைக்கப்பட்டது.
இந்த இணைப்பின் போது, அண்ணா பல்கலைக்கழகங்களின் கிளைகளில் நடைபெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனந்தகுமார் தலைமையில் 5 அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றினை 2017-ம் ஆண்டு ஜூலையில் தமிழக அரசு அமைத்தது.
இந்த குழு கடந்த சுமார் இரண்டரை ஆண்டு காலம் விசாரணை நடத்தி தற்போது அரசிடம் அறிக்கை சமர்பித்து உள்ளது. அதில், 2012-ம் ஆண்டு பல்கலைக்கழக இணைப்பின் போது நடைபெற்ற 135 பேராசியர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் நியமனங்களில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்றும், தற்போது இந்த பேராசிரியர்கள், ஊழியர்கள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் 16 உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் தற்போதும் பணிபுரிந்து வருவதாக குற்றம்சாட்டி உள்ளது.
இட ஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படாமலும், தகுதியில்லாத பேராசிரியர்கள் நியமனுமு, தேவைக்கு அதிகமாக கூடுதலாக விதி மீறி ஆள் சேர்ப்பு முறையில் 135 பேர் நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.
இந்த அறிக்கை வெளியானதும்…முறைகேடாக பணியில் இணைந்து 135 நபர்கள் மீதும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரும், அரசும், விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.