ஸ்டாக்ஹோம், சுவீடன்

ந்த வருட பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பெற்ற அபிஜித் பானர்ஜி – எஸ்தர் டூப்ளோ தம்பதியினர் புடவை மற்றும் வேட்டி அணிந்து வந்து பரிசை பெற்றனர்.

இந்த வருடத்துக்கான பொருளாதார நோபல் பரிசு  இந்திய வம்சாவளியினரான அபிஜித் பானர்ஜி,  பிரெஞ்சு பொருளாதார வல்லுநர் எஸ்தர் டூப்ளோ, மற்றும் மைக்கேல் கிரம்மர் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.  இதில் அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டூப்ளோ ஆகியோர் கணவன் மனைவி ஆவார்கள்.

அபிஜித் பானர்ஜி இந்தியாவில் உள்ள மும்பை நகரில் பிறந்தவர் ஆவார்.   பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்ற இரண்டாம் இந்தியர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார்.  இவரும் இதற்கு முன்பு நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னைப் போல் வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்த பரிசளிப்பு விழா சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹாம் கன்சர்ட் ஹாலில் நடந்தது.  இதில் கலந்துக் கொண்டு பரிசு பெற்ற அபிஜித் தம்பதி பாரம்பரிய இந்திய உடையில் வந்தனர்.   அபிஜித் பானர்ஜி ஒரு ஜரிகை வேட்டி மற்றும் கருப்பு நிற கோட் அணிந்திருந்தார்.  எஸ்தர் டூப்ளோ பச்சை மற்றும் ஊதா நிறம் கொண்ட சேலையும் சிவப்பு நிற ரவிக்கையும் அணிந்திருந்தார்.

இவர்கள் இருவரும் இவ்வாறு இந்திய உடையில் வந்து கலந்துக் கொண்டு பரிசு பெற்றது பலருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.  இவர்களின் புகைப்படம் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.  பலரும் இவர்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.