ராமேஸ்வரம்,
மறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தை பிரதமர் மோடி ஜூலை 27ந்தேதி திறந்து வைக்கிறார்.
இந்தியாவின் ஜனாதிபதியும், அணுவவிஞ்ஞானியுமான அப்துல் கலாம் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 27ந்தேதி மரணமடைந்தார். அவரது உடல் ராமேஸ்வரம் அருகே உள்ள பேகரும்பு பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அந்த இடத்தில் கலாமுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில் கலாம் வாழ்க்கை வரலாறு குறித்த மியூசியம், அறிவுசார் மையம், நூலகம், கூட்ட அரங்கு என பல்வேறு அம்சங்கள் அமைய உள்ளன.
இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணியை பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 27ந்தேதி அப்துல் கலாம் நினைவிடத்தில் வெண்கலத்தால் செய்யப்பட்ட 7 அடி உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் தமிழக அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து மணி மண்டபத்துக்கான கட்டுமாணப் பணிகள் விறுவிறுப்படைந்தன. இந்நிலையில் வரும் ஜூலை 27ந்தேதி அப்துல் கலாமின் இரண்டாவது நினைவு நாள் வருகிறது. அதற்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜூலை 27ம் தேதி, கலாம் நினைவு நாளில் திறப்பு விழாவை நடத்த அதிகாரிகள் முழுமூச்சுடன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கான விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள ராமேஸ்வரம் வர இருக்கிறார். ஜூலை 27ந்தேதி கலாமின் நினைவு நாளன்று கலாம் நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என கூறப்படுகிறது.
இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.