சென்னை: மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் மூலிகை பால் அறிமுகம் செய்வது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களின் கருத்தை ஏற்று,  அவர்களை திருப்திபடுத்தும் வகையில் ஆவின் நிறுவனம் திகழும் என்று கூறிய அமைச்சர் மனோ தங்கராஜ்  மூலிகை, அஸ்வகந்தா மற்றும் சுக்கு மல்லி காபி போன்ற புதிய ரகங்களையும் அறிமுகம் செய்து, அதன் தயாரிப்புகளை பன்முகப்படுத்த உள்ளதாக  தெரிவித்தார்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கூட்டமைப்பு (ஆவின்) சார்பில், 2024-25ஆம் ஆண்டுக்கான சட்டப் பேரவை அறிவிப்புகளை செயல்படுத்த, பயிற்சி பெற்ற களப்பணி யாளர்களுக்கு பால் சேகரிக்கும் கருவிகள், பரிசோதனை கருவிகள், பசுந்தீவன புல் ரேக், பாலுக்கு பாரம்பரிய கால்நடை மருத்துவம் ஆகியவற்றில் சான்றிதழ் கூட்டுறவு சங்கங்களுக்கு மூலிகை மருந்துகளும், பால் கடைகளுக்கு ஊட்டச்சத்து டானிக் விற்பனையும் சென்னை நந்தனம் இல்லத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக துறைஅமைச்சர் மனோ தங்கராஜ் தலைைமை ஏற்றார். மேலும் ஆவின்   நிர்வாக இயக்குனர் வினீத் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், ”கறவை மாடுகளுக்கான மூலிகை மருந்து குறித்த விவரங்களை, பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், நீங்கள் பெற்ற பயிற்சியை, பால் உற்பத்தியாளர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ” என்று அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வில் புதிதாக பதிவு செய்யப்படும் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு துருவுறா எஃகு பால் கேன்கள், பால் அளவை உபகரணங்கள் உள்ளிட்டவை வாங்குவதற்காக ரூ. 1,25,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை அமைச்சா் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தாா்.

அதேபோல், கறவை மாடுகளுக்கு நியாயமான விலையில் ஊட்டச்சத்து மருந்து வழங்குதல், 3,000 களப்பணியாளா்களுக்கு பாரம்பரிய கால்நடை மருத்துவ பயிற்சி வழங்குதல் ஆகிய திட்டங்களையும் அவா் தொடங்கி வைத்தாா். மேலும், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு ஆவின் மொத்த பால் உபபொருள்கள் விற்பனையாளா்களுக்கான நியமன ஆணையும், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் 170 பேருக்கு நிகழாண்டுக்கான ஆதரவு ஊக்கத் தொகையாக மொத்தம் ரூ.1.86 லட்சத்தை அவா் வழங்கினாா்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  ஆவினில் தினசரி 36 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் மற்றும் பால் உப பொருள்களின் விற்பனை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.  கடந்த ஆண்டு போல் இல்லாமல் நிகழாண்டில் பண்டிகை நாள்களில் மக்களுக்கு தேவையான பொருள்கள் அனைத்தையும் தடையின்றி விநியோகம் செய்ய ஆவின் நிறுவனம் தயாராக உள்ளது என்றவர்,

கடந்த ஆண்டு,  ஆவின் தினசரி பால் கொள்முதல் ரூ.26 லட்சமாக சரிந்தது. தற்போது தினமும் 35 லட்சம் முதல் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பால் கொள்முதல் மேலும் அதிகரிக்கும்.  சென்னைப் பகுதியில் நாள் ஒன்றுக்கு 15 லட்சம் லிட்டர் பால் வழங்குவதற்கான இலக்கை வெற்றிகரமாக எட்டிய பிறகு, ஆவின் அதன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளை வலுப்படுத்த கவனம் செலுத்தி வருகிறது. ஆவின் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் வலையமைப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறியவர்,  காக்களூரில் உள்ள பண்ணையில் பால் பாக்கெட் தயாரித்து கொண்டிருந்த போது பெண் ஊழியரின் தாவணி கன்வேயர் பெல்ட்டில் சிக்கியது. இந்த இயந்திரம் மெதுவாக இயங்கும். எப்படியோ ஒரு விபத்து அவரை அழைத்துச் சென்றது. அவரது குடும்பத்திற்கு தொழிலாளர் காப்பீடு மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

தொடர்ந்து பேசியவர், சட்டப்பேரவையில் அறிவித்த 4 அறிவிப்புகளை இன்று முதல் அமல்படுத்தி உள்ளோம். பசுந்தீவனம் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க விவசாயிகளுக்கு ரூ.1க்கு பசுந்தீவனம் வழங்கியுள்ளோம். புதிதாக தொடங்கப்பட்ட சங்கங்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்க ஆரம்பித்துள்ளோம் என்றதுடன்,  பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும்,  புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஆரோக்கியத்தைப் பேண மூலிகைப் பாலை அறிமுகப்படுத்த தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறோம். சுக்குமல்லி காபி வழங்குவது குறித்து பார்த்து வருகிறோம்,” என்றும் கூறினார்.

ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு திட்டம்