சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆவின் பால் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் இணையதளம் வாயிலாக ஆவின் பால் அட்டை பெற போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக இயக்குனர் வினீத் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டு மக்களிடையே அரசு வழங்கும் ஆவின் பாலுக்கு பெரும் வரவேற்பு உண்டு. எத்தனையோ தனியார் பால்கள் விற்பனையில் இருந்தாலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலோர் ஆவின் பாலையே நம்பியுள்ளனர். இந்த நிலையில் பால் வரத்து குறைந்த காரணத்தால் சென்னை உள்பட பல பகுதிகளில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக, மாதவரம் பால் பண்ணையில் ஆவின் பால் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கிருந்து விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் , மக்களுக்கு பால் விநியோகம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாதவரம் பால் பண்ணையில் இருந்து வடசென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் உள்ள பால் முகவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய மொத்த விநியோகஸ்தர்கள் மற்றும் நுகர்வோருக்கான மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யும் ஒப்பந்த வாகனங்கள் என சுமார் 30க்கும் மேற்பட்ட விநியோக வாகனங்கள் தற்போது நிலவரப்படி ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி இல்லாத காரணத்தால் மாதவரம் பால் பண்ணை வளாகத்திற்குள்ளேயே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள நிலை உருவாகி உள்ளது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதுபோல பார் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமியும், ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கத் தவறிய ஆவின் நிர்வாக இயக்குனர் வினித் ஐஏஎஸ் , பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, ஆவின் பால் தட்டுப்பாட்டை சரி செய்ய உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து ‘ இணையதள வாயிலாக பால் அட்டை பெற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆவின் நிறுவன இயக்குனர் வினீத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணைய நிறுவனம் சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், டிலைட் பால் மற்றும் நிறை கொழுப்பு பால் ஆகிய பால் வகைகளை பால் அட்டை மூலம் நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. அவ்வகையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 4.5 லட்சம் லிட்டர் பால், பால் அட்டை மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நுகர்வோர்களுக்கு தேவையான பால் வகைகளை சலுகை விலையில் பெற விரும்புவோர் நேரடியாக வட்டார அலுவலகங்களுக்கு சென்றும் மற்றும் www.aavin.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்தும் ஆவின் பால் பெற்று வருகின்றனர். தற்போது எவ்வித சிரமமுமின்றி பொதுமக்கள் தங்கள் இல்லங்களிலிருந்தே இணையதளம் மூலமாக பால் அட்டையை பெறும் வசதியை வரவேற்றுள்ளனர். மேலும் இணைதளம் மூலமாக பால் அட்டை விற்பனை மாதந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், ஜூன் மாதத்தில் ஆவின் நிறுவனம் பண பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்கில் மேம்படுத்தப்பட்ட கட்டண நுழைவாயில் முறையை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில நுகர்வோர்களுக்கு இணையதளம் வாயிலாக பால் அட்டை பெறுவதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை, உடனடியாக சரிசெய்து அனைத்து நுகர்வோர்களுக்கும் இணையதள வாயிலாக பால் அட்டை பெற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.