சென்னை: பால் பாக்கெட் சர்ச்சை தொடர்பாக, அமைச்சர் மனோ தங்கராஜுக்கும், மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், “நான் லஞ்சம் வாங்குனேனா? முடிஞ்சா நிரூபிச்சு காட்டுங்க”, தவறான தகவலை பகிர்ந்ததாக குற்றம்சாட்டி, மன்னிப்பு கோருமாறும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2 இரண்டு முறை பால் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், 5 முறைக்கு மேல் பால் பொருட்கள் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், கொழுப்பு சத்து மிகுந்த பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டை இன்று முதல் (நவம்பர் 25ந்தேதி) நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அதற்கு பதிலாக கொழுப்பு சத்து குறைந்த வயலட் நிற பால் பாக்கெட் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதாவது, பச்சை நிற பால் பாக்கெட்டுகள் 4.5 சதவீத கொழுப்புச்சத்துடன் லிட்டர் 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படியிருக்க, பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நவம்பர் 25ஆம் தேதியுடன் நிறுத்துவதகாவும், அதற்கு பதில் அதே விலையில் 3.5 கொழுப்புச்சத்துடன் கூடிய டிலைட் ஊதா நிற பால் பாக்கெட்டுகள் விற்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட எதிர்க்கட்சிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது, “கொரோனா காலத்தில் மற்ற நிறுவனங்கள் எல்லாம் கொள்முதலை நிறுத்திய நிலையில், ஆவின் மட்டுமே பால் கொள்முதலில் ஈடுபட்டதால் 34 லட்சம் லிட்டர வரை கொள்முதல் செய்துள்ளது. வடநாட்டில் இருக்கக் கூடிய நிறுவனங்களை இங்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு, அதற்கு கையூட்டு பெற்றுவிட்டு பேசுவது தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக்கூடிய ஒரு செயல்” என்று அண்ணாமலையை குறிப்பிட்டு பேசியிருந்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அமைச்சர் மனோ தங்கராஜ் பேசிய கருத்துக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்து, தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருக்கிறார்.
அதன்படி, ”அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களே, இன்றைய உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள். உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன்.ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும். உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு” என்று பதிவிட்டிருக்கிறார்.