திருவனந்தபுரம்: இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், சபரி மலை அய்யப்பன் கோவில் இன்று மாலை கோவில் நடை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். ஆராட்டு விழா பூஜைக்காக மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறப்பார். சித்திரை விஷு வரை 18 நாட்கள் நடை திறந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆராட்டு விழா ஏப்ரல் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 11-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி சிறப்பு வழிபாடும் நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஏப்ரல் 10-ஆம் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 11-ஆம் தேதி பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடக்க உள்ளது.
தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்குக் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும்.
விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி சிறப்பு வழிபாடு நடைபெறும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.