லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் மக்களவைத் தொகுதியில், முதல் திருநங்கை வேட்பாளரை நிறுத்தியுள்ளது ஆம் ஆத்மி கட்சி.
‘கின்னார் அகதா’ என்ற அமைப்பின் உறுப்பினரான மஹாமந்தலேஷ்வர் பவானி நாத் வால்மீகி என்ற பெயருடைய திருநங்கையைத்தான் முதன்முதலாக மக்களவைத் தேர்தலில் நிறுத்தியுள்ளது அக்கட்சி.
இதுதொடர்பாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுவதாவது, “கடந்த 2016ம் ஆண்டு டி.பி.பி.ஆர். சட்டத்தைக் கொண்டுவந்ததன் மூலம், திருநங்கை சமூகத்திற்கு தாங்கள் எதிரானவர்கள் என்பதை நிரூபித்தது பாரதீய ஜனதா அரசு.
ஆனால், எங்கள் கட்சியோ அவர்களின் உரிமைகளை எப்போதுமே மதிப்பவர்கள். தற்போது நாடாளுமன்ற தேர்தலில், ஒரு திருநங்கை வேட்பாளரை முதன்முதலில் நிறுத்தியிருப்பதன் மூலம் அதை செயலிலேயே காட்டியுள்ளோம்.
நாங்கள் நிறுத்தியுள்ள பவானி நாத் வால்மீகி வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தின் முதல் திருநங்கை வேட்பாளராக உள்நுழைவது உறுதி” என்றார்கள்.
46 வயதான திருநங்கை வேட்பாளர் வால்மீகி, ஒரு சமூக சேவகராக இருப்பதோடு மட்டுமின்றி, டெல்லி சர்வதேச திரைப்பட விழாவின் ஜுரி உறுப்பினராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
– மதுரை மாயாண்டி