மும்பை: மராட்டிய மாநிலத்தில், நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் முடிவிலிருந்து ஆம் ஆத்மி கட்சி பின்வாங்கியுள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், இம்மாநிலத்தின் 15 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து தனது விருப்பத்தை தெரிவித்திருந்தது அக்கட்சி. பின்னர், அந்த எண்ணிக்கை 5 என்பதாக குறைந்தது.

அதில், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் சுதீர் சாவந்த் போட்டியிட எண்ணியிருந்த மும்பை வடக்கு தொகுதியும் ஒன்று. ஆனால், தற்போது எங்குமே போட்டியிடுவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தனது தொகுதி உட்பட எத்தொகுதியிலும் வெற்றியை உறுதிசெய்ய முடியாது என மாநில ஒருங்கிணைப்பாளர் கட்சித் தலைமைக்கு தெரிவித்துவிட்டது மற்றும் வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியலை தலைமைக்கு அனுப்புவதில் காரணமற்ற தாமதம் செய்தது உள்ளிட்டவைகளால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.

மேலும், கட்சியினர் செய்த தாமதத்தால், ஆம் ஆத்மி சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்து, கட்சியின் உத்தேச வேட்பாளர் பட்டியலில் இருந்தவர்கள், வேறு கட்சிக்கு சென்று அங்கே வாய்ப்புகளைப் பெற்றுவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.

– மதுரை மாயாண்டி