டெல்லி: டெல்லி மாநகர காவல்ஆணையராக ராகேஷ் அஸ்தானா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெஜ்ரிவால் அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
டெல்லி போலீஸ் கமிஷனராக முன்னாள் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவை மத்திய உள்துறை நியமித்து உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ராகேஷ் அஸ்தானா மீது ஏற்கனவே பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்த நிலையில், அவர் சிபிஐ பதவியில் இருந்து , மத்திய சட்ட அமைச்சகத்தின் வலியுறுத்தலின் பேரில் ராஜினாமா செய்தார். பின்னர் அவருக்கு பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் பதவி வழங்கப்பட்டது.
இநத் நிலையில், தற்போது ராகேஷ் அஸ்தானாவை டெல்லி காவல் ஆணையராக உள்துறை அமைச்சகம் நியமித்து உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. டெல்லி போலீஸ் கமிஷனராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ராகேஷ் அஸ்தானாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு டெல்லி பாஜக எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
முன்னதாக இன்று காலை டெல்லி ஜெய்சிங் மார்க் பகுதியில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில், ராகேஷ் அஸ்தானா கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.