
ப்ளெஸ்ஸி இயக்கத்தில் ப்ரித்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆடுஜீவிதம்’.
சில முக்கியமான காட்சிகளைப் படமாக்க ஜோர்டன் நாட்டுக்குச் சென்றது படக்குழு.இந்நிலையில் தான் உலகெங்கும் கொரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது .அங்கிருந்து திரும்ப முடியாத நிலை இருந்ததால் படப்பிடிப்பைத் தொடர்ந்தது படக்குழு.
இந்தப் படத்தில் நடிக்கும் முக்கிய வெளிநாட்டு நடிகர் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பாலைவனத்தில் ஒரு கூடாரத்தில் நாட்களைக் கடத்தியது படக்குழு.
மத்திய அரசின் வந்தே பாரத் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, வெளிநாட்டில் சிக்கியிருக்கும் இந்தியர்களைத் தாய்நாட்டுக்கு அழைத்து வரும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், ஜோர்டன் நாட்டிலிருந்த 187 இந்தியர்கள் தாய்நாடு திரும்பியுள்ளனர். இதில் ‘ஆடுஜீவிதம்’ குழுவினரும் அடக்கம்.
இந்தக் குழுவினர் அனைவரும் விதிமுறைகளின்படி குறிப்பிட்ட காலம் வரை தனிமைப்படுத்தப்படுவார்கள். கொச்சியில் இருக்கும் கட்டணத் தனிமைப்படுத்தல் மையத்தை படக்குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
BACK! #OffToQuarantineInStyle pic.twitter.com/eB0ZCfRAVw
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) May 22, 2020
தனிமைப்படுத்தப்பட ஸ்டைலாகச் செல்கிறேன் என நடிகர் ப்ரித்விராஜ், விமான நிலையத்திலிருந்து புறப்படும் புகைப்படத்தோடு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.