சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஆடிப்பெருக்கு (ஆடி 18) கொண்டாடப்படுவதில், இன்றைய நாளில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறலாம் என்பதால், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்ய கூடுதல் நேரம் மற்றும் கூடுதல் டோக்கன் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டு உள்ளது.
ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழிமொழி. இதனால் விவசாயிகள் ஆடி மாதம் விதை விதைத்து தை மாதம் அறுவடை செய்து வருகின்றனர். பொதுவாக ஆடி மாதம் எந்தவொரு புதிய பொருளையோ, இடங்களையோ வாங்கினாலும், ஆடிக்கு ஆடி (வருடந்தோறும்) புதிய பொருட்கள் சேரும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. ஆடி மாதத்தில் 18 வது நாளை ஆடிப்பெருக்கு என்று தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஏராளமானோர் சொந்து வாங்க, விற்பனை செய்ய என கூட்டம் அலைமோதும் என்பதால், தமிழ்நாடு அரசு, பதிவுத்துறை அலுவலகங்களில் இன்று கூடுதல் நேரம் பணியாற்றவும், அதிக அளவிலான பதிவுக்கான டோக்கன்களை வழங்கவும் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக டோக்கன் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தற்போது ஆன்லைன் பதிவு முறை கொண்டுவரப் பட்டிருப்பதால் ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கும் குறிப்பிட்ட அளவு டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதனால் தற்போது அதிக நேரம் காத்திருப்பு, அலைச்சல் என ஏதுமின்றி பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்து கொள்கிறார்கள்.
இன்று ஆடிப்பெருக்கு என்பதால், சென்னை நந்தனம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வழக்கமாக 150 டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில், இன்று 300 டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல மாநிலம் முழுவதும் கூடுதல் டோக்கன்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு குறிப்பிட்டுள்ள நேரத்தில் சரியாக வந்து தங்கள் பத்திரப்பதிவு எளிதாக முடித்துக் கொள்ளலாம் என்றும் நேரம் தவறி வந்தால் மற்றவர்களுக்கு அது இடையூறாக மாறும் எனவும் பத்திர பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.