விருதுநகர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல நாளை முதல் 6 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேலும் பல கண்டிஷன்களும் போடப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. கடல் மட்டத்தில் இருந்து 3000 அடிக்கு மேல் உள்ள இந்த மலைமீது, எழில்கொஞ்சும் சோலையில், சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் என்ற பெயரிலான சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த கோவிலுக்கு பக்தர்கள் சென்று தரிசிக்க மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மட்டுமே வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது. மழைக்காலங்களில் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதால், அப்போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை.
இந்த மலைப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், சதுரகிரி மலைக்கு செல்ல பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இந்த நிலையில், ஆடி அமாவாசையையொட்டி, பல ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதனால், , 6 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கி உள்ளது.
16-ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன.
பக்தர்கள் அதிக அளவில் திரளுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு நாளை (12-ந்தேதி) முதல் 17-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 வயதுக்கு உட்பட்டோர்களும், 60 வயதுக்கு மேற்பட்டோரும் மலையேற அனுமதி கிடையாது.
காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது.
மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது. இரவில் மலை கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.
மேலும், ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை, விருதுநகர், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வனத்துறை மற்றும் போலீசார் சார்பில் பாதுகாப்பு பணிகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சதுரகிரியை ஒட்டியுள்ள ஊஞ்சிக்கல் மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. இதன் காரணமாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறை காட்டுத்தீ ஏற்பட வாய்ப்பில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் சதுரகிரி மற்றும் அதனை ஒட்டியுள்ள வனப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என தெரிகிறது.