விசிக மற்றும் திருமாவளவனுக்கு தொடர் நெருக்கடி ஏற்படுத்தியதாலேயே ஆதவ் அர்ஜீன் இடைநீக்கம் செய்யப்பட்டதாக விசிக துணைப் பொதுச் செயலாளர் கௌதம சன்னா விளக்கமளித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து 6 மாத காலம் ஆதவ் அர்ஜீன் இடைநீக்கம் செய்யப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜீன் அந்த கூட்டத்தை தவெக-வுக்கு ஆள் சேர்க்கும் கூட்டமாக மாற்றியதோடு திமுக மற்றும் அதன் தலைமையை நேரடியாக தாக்கிப் பேசினார்.

ஆதவ் அர்ஜீன் கலந்து கொள்ளும் கூட்டங்களை தன்னை முன்னிலைப் படுத்தி நடத்தப்படும் கூட்டங்களாக மாற்றுவதோடு திமுக-வுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக கூறிவந்த நிலையில் கடந்த வாரம் அவர் பேசிய இந்த பேச்சு திமுக கூட்டணியில் விரிசல் விழுந்துவிட்டதாக அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இது விசிக-வுக்கு நெருக்கடி ஏற்படுத்தியதை அடுத்து ஆதவ் அர்ஜீன் மீது கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் நெருக்குதல் காரணமாகவே ஆதவ் அர்ஜீன் மீது திருமாவளவன் நடவடிக்கை எடுத்ததாகப் பரப்பப்படுகிறது.

இது ஆதவ் அர்ஜீனை ஆதரிப்பவர்கள் மேற்கொள்ளும் விஷம பிரச்சாரம் என்று விசிக துணை பொதுச் செயலாளர் கௌதம சன்னா கூறியுள்ளார்.

இதுகுறித்து கௌதம சன்னா தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது :

“அர்ஜுன் ஆதவ் மீதான எழுச்சித்தலைவரின் நடவடிக்கைக்கு இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் காரணம் என்ற பிம்பத்தை கட்டமைத்தது யார் ..?

இந்த பிம்பம் விசிக கட்சி கட்டுக்கோப்பான கட்சி என்றும் தலைவர் கட்டுப்பாடு மிக்க வலிமையான தலைவர் என்கின்ற பிம்பத்தையும் அடித்து நொறுக்க உதவியது என்பதை தவிர வேறென்ன சாதித்தது..?

தலைவர் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை அதை மீற முடியாது என்கின்ற மனநிலை இருக்கும் போது, தலைவரே மூன்று முறை நேரடியாக ஆதவ் அர்ஜுனிடம் பேசியும் அதை அவர் தொடர்ந்து மீறியது ஏன்..?

கள்ளக்குறிச்சி மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஒரு பைசா கூட செலவு செய்யாத ஆதவ் அர்ஜுன்.. அந்த மாநாட்டின் ஏற்பாட்டுப் பணிகளில் எதையும் செய்யாத ஆதவ் அர்ஜுன் அந்த மாநாட்டை தனது விஓசி நிறுவனம் நடத்தியது என்கின்ற பொய்யையும் அதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்தது என்கின்ற பிம்பத்தையும் பரப்ப வீடியோ வெளியிட்டது ஏன்…?

ஆதவ் அர்ஜுனிடம் தலைவர் 200 கோடி ரூபாய் வாங்கி விட்டார் என்கின்ற வதந்தி பரவியபோது அதை மறுத்தோ அல்லது கண்டித்தோ ஒரு அறிக்கை கூட வெளியிடாமல் அந்த வதந்தியை தொடர்ந்து பரவ விட்டது ஏன்…?

கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களிடம் தனக்கு ஆதரவாக இருக்கும் படி பண ஆசை காட்டி பேரம் பேசிய விவரங்களை சில முன்னணி பொறுப்பாளர்கள் சொல்லி குமுறியது ஒரு பக்கம் இருந்தாலும் இது போன்ற நடவடிக்கைகளை ஆதவ் அர்ஜுன் மேற்கொண்டது ஏன்…?

விகடன் நூல் வெளியீட்டு விழா நிகழ்விற்கு முதலில் தலைவரின் வருகையை உறுதி செய்து விட்ட பிறகு பிற தலைவர்கள் வர முடியாது என்கின்ற நிலையில் நடிகர் விஜய் அழைத்து வெளியிட வைத்தது ஏன்..?

அந்த புத்தகத்தை வெளியிட எழுச்சித் தலைவருக்கு தகுதி இல்லையா.? நடிகர் விஜய் வெளியிட வேண்டும் என்கின்ற நிலையை ஆதவ் அர்ஜுன் உருவாக்கியது ஏன்..?

சிறுத்தைகளின் ஏக்கங்களை திமுகவின் எதிர்ப்பாக மாற்றி விட்டது மட்டுமின்றி கட்சியின் பொறுப்பாளர்களுக்கு எதிராக திருப்பி விட்டதில் பின்னணியில் இருக்கும் செயல் திட்டத்தை வடிவமைத்தது யார் என்பதெல்லாம் தெரிந்துதான் இந்த நடவடிக்கை.

தலைவரின் வழிகாட்டுதலோடு இரண்டாம் கட்ட தலைவர்கள் ஊடகங்களில் பேசும் பொழுது அதையும் திரிக்கும் அவரது ஊடக போலிகள் தொடர்ந்து விமர்சித்து வருவதற்கான தெளிவுதான் இந்த விளக்கம்.

ஆதவ் அர்ஜுன் மீதான நடவடிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் எனும் உழைப்பால் வியர்வையால் வளர்ந்த கட்சியின் நலன் மட்டுமே காரணம். வேறு எந்த காரணங்களும் இல்லை என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் தலைவரின் பொதுவான வழிகாட்டுதலை பின்பற்றி பதிவிடப்பட்டதே” என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.