சென்னை,

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை மனு கொடுத்துள்ளது.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை புதிய பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றும், அதன் காரணமாக இரட்டை பதிவு, முகவரி மாற்றம் போன்றவை சரி செய்யப்பட்டு போலி வாக்காளர்கள் நீக்கப்படும் என கூறி உள்ளது.

திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

குஜராத், இமாச்சல பிரதேசம் தவிர மற்ற மாநிலங்களில் 2018- ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அக்.3 முதல் 31-ம் தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அக். 7 மற்றும் 21-ம் தேதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் கிராமசபை, உள்ளாட்சி அமைப்புகளில் வைக்கப்படும் என்றும், அக்.8 மற்றும் 22-ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 10-ம் தேதி மனுக்கள் முழுவதுமாக பரிசீலிக்கப்பட்டு முடிக்கப்படும் என்றும், டிசம்பர் 11 முதல் ஜனவரி 3-ம் தேதி வரை இணைப்புப் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு, 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடந்தபோது, பல வேட்பாளர்களின் வெற்றி என்பது குறைந்த வாக்குகளில் முடிவானது. எங்கள் கட்சியின் சார்பில் போலி வாக்காளர்கள் பெயர்களை நீக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தோம். இரட்டை பதிவுகள், பலமுறை பதிவுகள், இறப்பு வாக்காளர்கள் பட்டியலை நாங்கள் தொகுதி வாரியாக அளித்திருந்தோம். இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டு, தவறுகளை களைய, தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு மென்பொருள் ஒன்றையும் அளித்திருந்தோம். தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க உத்தரவிட்டபோதும், அதிகாரிகள் நீக்கவில்லை.

தற்போது, சென்னையில் உள்ள சில சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு முடிந்துள்ளதாக தெரிகிறது. இதை, தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தினால் இரட்டை பதிவுகள், பல பதிவுகள் உள்ளிட்டவை நீக்கப்பட்டு, 100 சதவீதம் தவறுகள் இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க முடியும். ஆனால், இறந்த வாக்காளர்களை பொறுத்தவரை, ஆதார் இணைப்பு பயன்தராது. நேரடியாக கள ஆய்வு செய்வது அவசியம்.

எனவே, முகவரி மாறியவர்கள், இறந்தவர்கள் பெயர்களையும் இரட்டை, பல பதிவுகளையும் நீக்க வேண்டும். புதிய தரவுகள் கொண்ட இறுதி வாக்காளர் பட்டியலை உருவாக்கும்போது, புகைப்படங்களை இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் வெளிப்படையான, நேர்மையான தேர்தல் நடப்பதை தடுத்துவிடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவின் நகல், தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.