சென்னை:

மிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளான பகுதிகளில் தவிர மற்ற பகுதிகளில்  முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண், ஆதார் விவரங்களைச் சேகரிக்கும்படி தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இதன் காரணமாக இனிமேல் முடிவெட்டுதல், சேவ் செய்தல் போன்றவற்றுக்காக முடிதிருத்தும் கடைகளுக்கு செல்பவர்கள் மற்றும் அழகு நிலையங்களுக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் அனைவரும் ஆதார் தகவலை கொடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும்பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, மே 19ஆம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில்  அழகு நிலையங்கள், முடி திருத்தும் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டன. பின்னர் ஜூன் 1ந்தேதி முதல் சென்னையிலும் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில்  கடைகள் திறக்கப்பட்டன.

தற்போது அதற்கான  வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம்  வெளியிட்டுள்ளது. அதன்படி கடைகளின் வாயிலில் கைகளைச் சுத்தம் செய்வதற்கான சானிடைசர்களை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அழகு நிலையங்களுக்கு வருபவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆதார் எண் ஆகியவற்றின் விவரங்களைப் பெற வேண்டும்

கைகளைத் துடைப்பதற்கான பேப்பர் நாப்கின்கள் வைக்கப்பட வேண்டுமென்றும்

அவை பயன்படுத்தப்பட்ட பிறகு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட வேண்டுமென்றும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும்,  ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சேவையைத் துவங்கும் முன்பாக பணியாளர்கள் தங்கள் கைகளை சானிடைசர்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் பணியாளர்களும் உரிமையாளரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டுமென்றும் பணியாளர்கள் உடல்நலக் குறைவு இருக்கும்போது பணிக்கு வரக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றுடன் வரும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கக்கூடாது

அழகு நிலையங்களுக்குள் ஐம்பது சதவீத இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென்றும்,

பெரும்பாலும் முன்கூட்டியே நேரத்தைப் பதிவுசெய்ய வாடிக்கையாளர்களை அறிவுறுத்த வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்குப் பயன்படுத்திய பிறகு, எல்லாக் கருவிகளும் சானிடைசர்களை வைத்து சுத்தம் செய்யப்பட வேண்டுமென்றும் இருக்கைகள் சுத்தம் செய்யப்பட வேண்டுமென்றும் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியக்கூடிய மேலங்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகம் ஆகியவை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.