ஐதரபாத்: பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்ய ஆதார் அட்டை  கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் அனைத்து திட்டங்கள், சலுகைகள் பெற ஆதார் கட்டாயமாக்‍கப்பட்டுள்ளது. பல இடங்களில் இது தொடர்பான குழப்ப நிலையே நிலவி வருகிறது.
இந்நிலையில், பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்ய ஆதார் கட்டாயமா, இல்லையா என்று ஆந்திராவை சேர்ந்த எம்விஎஸ் அனில் குமார் ராஜகிரி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதில் அளித்துள்ள மத்திய அரசானது, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்ய ஆதார் கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி எழுப்பப்பட்ட இந்த கேள்விக்கு இந்திய தலைமை பதிவாளர் பதிலளித்துள்ளார்.
அதற்காக 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட சுற்றிக்கையை மேற்கோள்காட்டி பதிலளித்துள்ளார். பிறப்பு, இறப்பு தொடர்பாக தாங்களாகவே முன்வந்து ஆதார் எண்ணை அளித்தாலும், ஆவணங்களில் அந்த எண்ணை அச்சிடவோ, மின்னணு வடிவில் சேமித்து வைக்கவோ கூடாது என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்வது 1969 ஆம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தின் கீழ் செய்யப்பட்டது, இது ஒரு மத்திய சட்டமாகும். இருப்பினும், அந்தச் சட்டத்தின் விதிகளை அமல்படுத்துவது மாநில, யூனியன் அரசாங்கத்திடம் உள்ளது என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.