சென்னை: அரசின் பல்வேறு வகையான நலத் திட்டங்கள் மற்றும் மானியங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசின் நிதித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மத்தியஅரசின் பல்வேறு சலுகைகளை பெற ஆதார் எண் கட்டாயம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் பல துறைகளில் ஆதார் எண் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. செல்போன் சிம் வாங்க, வங்கி கணக்குகள், பான் எண் மற்றும் சம்பளம், ஓய்வூதியம் பெறுபவர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள்  என பெரும்பாலானவர்கள் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இதுமட்டுமின்றி தமிழ்நாட்டில், 7 துறைகளில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.  தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களை தவிர்த்து பிற அனைவரும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழக  அரசின் நலத்திட்டங்கள், மானியங்கள் பெற என அனைத்திற்கும் தற்போது ஆதார் எண்  கட்டாயம் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA)-க்கு துணை அங்கீகார பயனர் முகமையாக கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை நியமிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையின் மூலம் பல்வேறு வகையான மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.