சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையில், நேற்று தொடங்கிய சிறப்பு முகாமில், மட்டும் சுமார் 5லட்சம் பயனர்கள் ஆதார் எண்ணை இணைத்து பயன்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வீடுகள், கைத்தறி, விசைத்தறி, குடிசைகள் மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக மின்வாரியம் உத்தரவிட்டு உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த முகாம் நடக்கிறது. தமிழகம் முழுவதும் 2811 பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 5 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தனர். கடந்த 15-ந் தேதி முதல் இதுவரை ஆன்லைனிலும், சிறப்பு முகாமிலும் 20 லட்சம் பேர் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்துள்ளனர் என மின்வாரியம் தெரிவித்து உள்ளது.
மாநிலம் முழுவதும் மின்சார வாரியத்தின் மின் கட்டண வசூல் மையங்களில் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.