டில்லி,
ஆதார் தகவல்கள் தனிமனித உரிமைதான் என்று சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
உச்சநீதி மன்ற அமர்வின் இந்த தீர்ப்பு மத்திய அரசுக்கு சரியான சாட்டையடி என்றும், அனைத்து பரிவர்த்தனைக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறிவந்த மத்திய அரசுக்கு விழுந்த மரண அடி என்றும் கூறப்படுகிறது.
மத்திய அரசின் ஆதார் கட்டாயம் என்ற அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து பல்வேறு தரப்பினர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அப்போது, ‘அரசியல் சாசனத்தின்படி ஒருவரின் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையா?’ என்ற கேள்வி எழுந்தது. பரபரப்பான இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரணை செய்து வந்தது.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது கொண்டு வந்த ஆதார் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த பாரதியஜனதா, மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து பரிவர்த்தனைக்கும் ஆதார் அவசியம் என கூறியது.
தொடக்கத்தில் அரசு தொடர்பான சலுகைகள் பெற மட்டுமே என்று கூறிய மத்திய அரசு பின்னர், ஒன்றன் பின் ஒன்றாக வருமான வரி தாக்கல், பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு, மொபைல் எண் பெறுவது, ஓட்டுனர் உரிமம், கல்வி கட்டணம், சத்துணவு போன்ற அனைத்து விவகாரங்களுக்கும் ஆதார் அட்டை அவசியம் என கூறியது.
ஆதார் தொடர்பான படிவங்களில் எத்தனை முறை திருமணம் ஆகி உள்ளது, யாருடன் எல்லாம் திருமணம் ஆகி உள்ளது என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என கருத்து எழுந்தது.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமை யில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில் நீதிபதிகள் ரோஹிண்டன் பாலி நாரிமன், சஞ்சய் கிஷன் கவுல், அபய் மனோகர் சப்ரே, சந்திரசூட், அப்துல் நசீர், எஸ்.ஏ.பாப்டே, ஆர்.கே.அகர்வால், ஜே.செல்லமேஸ்வர் ஆகியோர் கொண்ட அரசிய்ல சாசன அமர்வு விசாரித்து.
இந்த அமர்வின் முன் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வக்கீல்கள் அரவிந்த் தட்டார், கபில் சிபல், கோபால் சுப்பிரமணியம், சியாம் திவான், ஆனந்த் குரோவர், சி.ஏ.சுந்தரம், ராகேஷ் திவிவேதி உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.
பரபரப்பான இந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த 2-ந் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
அதையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நீதிமன்ற அமர்வு, தனி நபர் அந்தரங்கம் அடிப்படை உரிமை என பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
வரலாற்று முக்கியமான இந்த தீர்ப்பு மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.