பெங்களூரு:

கர்நாடகாவில் நாயை காப்பாற்ற முதலையிடம் சிக்கிய வாலிபர் தனது இடது கையை இழந்தார்.

நாக்பூரை சேர்ந்த முன்னாள் ஐஐடி மாணவர் முதித் தந்த்வாடே பெங்களூரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கர்நாடக மாநிலம் ராமனாகரம் மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு தன்னுடைய நண்பருடன் சென்று உள்ளார். அவர்கள் தங்களுடைய 2 நாய்களையும் தங்களுடன் அழைத்து சென்று உள்ளனர்.

காட்டிற்குள் சென்ற போது காரில் இருந்து இறங்கி சிறிது தொலைவு நாயுடன் நடந்து சென்றனர். அப்போது ஏரி ஒன்று தென்பட்டு உள்ளது. தண்ணீர் நிறைந்து இருந்த ஏரியை பார்த்த நாய்கள் உள்ளே குதித்து நீந்த தொடங்கிவிட்டது. அப்போது அவைகளை வெளியே இழுத்து வர முதித் தந்த்வாடே உள்ளே சென்றார்.

ஏரியின் எல்லையில் முதலைகளை இருப்பதாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் நாய்களை பிடிக்கும் அவசரத்தில் அவர் உடனடியாக அதனை கவனிக்காமல் ஏரிக்குள் சென்றபோது முதலை ஒன்று முதித் தந்த்வாடே கையை கடித்துவிட்டது. அவருடைய இடது கையின் பாதியை முதலை கடித்து எடுத்துச் சென்றுவிட்டது. உடனடியாக முதித் தந்த்வாடேவை அவருடைய நண்பர் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தார்.

பின்னர் ஹாஸ்மாட் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருடைய உடல் நிலை சீராக உள்ளது. எனினும் துண்டிக்கப்பட்ட கையை இணைக்க முடியாமல் போனது. செயற்கை கை மட்டுமே பொறுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.