சபரிமலை:

சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட தங்க கொடி மரத்தை பாதரசம் வீசி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக 5 பேர் சிக்கினர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ரூ.3.20 கோடி செலவில் புதிய தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி சன்னிதானத்தில் பல்வேறு பூஜைகள் நடந்தது. அப்போது, அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் அய்யப்பனை வழிபட்டனர். மதியம் 2.40 மணி அளவில் கொடி மரத்தின் சதுர வடிவ பீடத்தின் மீது பாதரசம் வீசப்பட்டு சேதமடைந்திருந்ததை கோவில் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்த தகவல் மாநில முதல்-வர் பினராயி விஜயனுக்கும் தெரிவிக்கப்பட்டது. சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கோவிலுக்கு போலீஸ் உயர் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் விரைந்தனர்.

இந்த நிலையில் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொடி மரத்தை 5 பேர் சேதப்படுத்திய காட்சி பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஒரு முதியவர் உள்பட 5 பேரை கோவில் நிர்வாகத்தினர் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இவர்கள் 5 பேரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள். இவர்கள் வழக்கமாக சபரிமலை கோவிலுக்கு செல்பவர்கள். முன்னதாக இவர்களில் ஒருவர் கொடி மரத்தில் ஏறவும் முயற்சி செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.