மதுரை :
மதுரையை அடுத்த வத்திராயிருப்பை சேர்ந்தவர் சந்திரமோகன், சிவில் இன்ஜினியரான இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பணிபுரிகிறார்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் தான் வசித்துவந்த சிறு அறையிலேயே முடங்கிக் கிடந்ததோடு, தன்னார்வலர்கள் வழங்கிய உணவை வாங்கி காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தார்.
இந்நிலையில், சீர்காழியில் இருக்கும் அவரது தாயார், தனது பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் அகமதாபாத் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, கடந்த ஏப்ரல் 22ம் தேதி தனது ஹீரோ ஹோண்டா பைக்கில் தமிழகம் கிளம்பி வந்தார்.
இவரது ஒரு சகோதரர் சென்னையிலும் சகோதரி திருவண்ணாமலையில் வசித்துவரும் வேலையில், குளுக்கோமா குறைபாடால் ஒரு கண் பார்வை இழந்த இவரது தாயார் மட்டும் சீர்காழியில் வசித்துவந்தார். தங்களை பார்க்க வேண்டும் என்று தாயார் தவிப்பதை தாங்கிக் கொள்ளமுடியாமல் 2500 கி.மீ. பைக்கிலாவது சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில், மாவட்ட நிர்வாகம் அளித்த இ-பாஸ் வைத்துக்கொண்டு, ஒரு பை நிறைய, பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில்களுடன் கிளம்பினார் இந்த 43 வயது சிவில் இன்ஜினியர்.
அகமதாபாத் முதல் மும்பை வரும் வரை பெட்ரோல் பங்குகளில் சிறிது நேரம் ஓய்வெடுப்பதும், தனக்கு தேவையான பிஸ்கட் மற்றும் தண்ணீரை வாங்கியும் பெரிதாக எந்த சிரமும் இன்றி பயணம் செய்து வந்தவருக்கு மும்பை முதல் கர்நாடக மாநிலத்தை கடக்கும் வரை அவ்வளவு எளிதாக இல்லை என்று கூறும் சந்திரமோகன்.
இந்த பகுதி காடுகள், மலைகள், வனாந்திரமான பகுதிகளாகவும் பெட்ரோல் பங்குகளை காண்பதே அரிதாக இருந்ததாகவும், ஓசூரை வந்தடைந்த பின்தான் தனக்கு மீண்டும் நம்பிக்கை வந்ததாகவும் விவரிக்கிறார்.
தமிழகம் வந்ததும் தனது மனைவி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தனது தாயாரை பார்க்க எண்ணி வத்திராயிருப்பு வந்தவருக்கு இங்குள்ள மாவட்ட நிர்வாகம், இவர் குஜராத்திலிருந்து வந்ததை அறிந்து இவரை 15 நாள் தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளதோடு, அதன் பிறகு தான் இவர் சீர்காழி செல்வதற்கு அனுமதியளிக்க முடியும் என்று கூறிவிட்டது.
அதேவேளையில், சென்னையில் இருக்கும் இவரது சகோதரருக்கும் திருவண்ணாமலையில் இருக்கும் இவரது சகோதரிக்கும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அனுமதியளித்தால் மட்டுமே கடும் வெயிலையும் பொருட்படுத்தாது ஒரு நாளைக்கு 15 மணி நேரம் பயணம் செய்து 2436 கி.மீ. கடந்து வந்தவருக்கு ஆறுதலாக இருக்கமுடியும்.
ஏப்ரல் 22 தொடங்கி ஏப்ரல் 25 வரை தான் பயணம் செய்த வழிநெடுகிலும் உள்ள பெட்ரோல் பங்குகளிலும், சோதனை சாவடிகளிலும் தான் கையில் வைத்திருந்த இ-பாஸ் தான் தனக்கு ஆபத்பாந்தவனாக இருந்தது என்று கூறிய சந்திரமோகன், இ-பாஸ் இருந்ததால் மட்டுமே பெட்ரோல் பங்குகளில் கூட தனக்கு பெட்ரோல் வழங்கியதாகவும் கூறினார்.