இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்தது.

தொடர் மழை காரணமாகவும் மோசமான வானிலை காரணமாகவும் இந்த நிகழ்ச்சி வேறு தேதிக்கு மாற்றப்படுவதாக கடைசி நிமிடத்தில் அறிவிக்கப்பட்டது.

இதனால் தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனையடுத்து சென்னையில் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென்று தமிழக அரசு அரங்கம் அமைத்துத் தரவேண்டும் என்று ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஏற்கனவே அறிவித்தது போல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞர் கருணாநிதி பெயரில் விரைவில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும்.

உலகத்தரத்துடன் 25 ஏக்கரில் அமையவிருக்கும் இந்த பன்னாட்டு அரங்கம் உலகளாவிய தொழில் கண்காட்சிகள் – வர்த்தக மாநாடுகள் – தொழில்நுட்பக் கூட்டங்கள் – உலக நிறுவனங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் – உலகத் திரைப்பட விழாக்கள் – போன்றவை நடக்கும் இடமாக இருக்கும்.

‘கலைஞர் Convention Centre’ சுமார் 5 ஆயிரம் நபர்கள் அமரக்கூடிய – உலகத்தரத்திலான மாநாட்டு அரங்கம், கண்காட்சி அரங்கங்கள், நட்சத்திரத் தரத்திலான தங்கும் விடுதிகள், உணவகங்கள், ஊடக அரங்கங்கள், பூங்காக்கள், பன்னடுக்கு வாகன நிறுத்தம் – ஆகியவற்றை உள்ளடக்கி மிகப்பிரம்மாண்டமாக உலகத் தரத்தில் சென்னையில் அமைக்கப்படும் என்பதை பெருமையோடும் – மகிழ்ச்சியோடும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது ட்விட்டரில் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.