
மதுரை:
அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவிடமிருந்து என் கணவரை மீட்டுத்தரும்படி சத்தியப்ரியா என்ற பெண்மணி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருப்பவர் சசிகலா புஷ்பா. இவர் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் அவர் தனது கணவர் லிங்கேஸ்வரனை விவாகரத்து செய்தார்.

இதற்கிடையே டில்லியில் வரும் 26-ம் தேதி ராமசாமி என்பவரை சசிகலா புஷ்பா மணக்கப்போவதாக அழைப்பிதழ் ஒன்று சமூகவலைதளங்களில் வலம் வருகிறது. ராமசாமி ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளதாக அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் அவர், நாடாளுமன்றத்தின் சட்ட ஆலோசகராக உள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மகாளிபட்டியிலிருந்து கைக்குழந்தையோடு சத்யப்பிரியா என்ற பெண்மணி வந்தார். அவர், தமக்கும் சசிகலா புஷ்பா திருமணம் செய்ய உள்ளதாக இருந்த ராமசாமிக்கும் 2014 ம் வருடம் திருமணம் நடைபெற்றதாகவும், தன்னை நீதீபதி என்று ராமசாமி சொல்லிக்கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும், சசிகலா புஷ்பாவிடமிருந்து தனது கணவர் ராமசாமியை மீட்டு தன்னுடன் சேர்த்துவைக்க வேண்டும் என்று மனு அளித்தார்.
ராமசாமியை சசிகலா புஷ்பா திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வந்திருக்கும் நிலையில் சத்தியப்பிரியாவின் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]