சென்னை: விவசாயிகள்மீது வாகனத்தை ஏற்றி கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ.பி. மாநில பாஜக முதல்வர் யோகிக்கு எதிராக, தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளில் ஒருவரான நடிகை குஷ்பு போர்க்கொடி தூக்கி உள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது, பாஜகவினர் காரால் இடித்து தள்ளியதில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு காரணமாக சொல்லப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் உட்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தற்போது நடிகையும், பாஜக உறுப்பினரு மான குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் கடும்கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அதில், உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி 8 பேரை கொன்றது முடியாதது மற்றும் பெரும் குற்றம். அந்த நபர் யார் என்பதைப் பொருட்படுத்தாமல், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனித உயிர்களை விட வேறு எதுவும் முக்கியமில்லை. மனிதாபிமானம் இந்த நாட்டின் சாராம்சம் எனவும் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் உ.பி. மாநில அரசுக்கு எதிராக தமிழ்நாடு பாஜகவைச்சேர்ந்த குஷ்பு டிவிட் போட்டுள்ளது, பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.