சென்னை,

கோயில்களில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நடைமுறைகள் காலத்துக்கேற்றபடி அதிநவீனமடைந்து வருகின்றன. கோயில் பிரசாதம் என்றாலே விபூதி, துளசி தீர்த்தம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல்தான் நினைவுக்கு வரும். ஆனால் சென்னை படப்பையில் இருக்கும் கோயில் ஒன்றில் பிரசாதமாக பர்கர்,  கேக்குகள், சாக்லெட் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.

படப்பையில் துர்காபீடம் என்ற கோயிலில்தான்  இவை பிரசாதமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்ல இந்த உணவுப் பொருள்கள் உணவு பாதுகாப்பு மற்றும் இந்திய தர ஆணையத்தால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளவையாகும்.  இவற்றை பெற நாம் குருக்களை நாட தேவையில்லை. இதற்காகவே இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்குசென்று பொத்தானை அழுத்தினால் பிரசாதம் அழகிய பாக்கெட்டுகளாக வந்து விழுகின்றன.

சுத்தமான சமையல் அறையில்  தூய்மையான மனதுடன்  உணவு சமைப்பது கடவுளுக்குச் செய்யப்படும் தொண்டு. அது இந்திய பாரம்பரிய உணவில்தான் உள்ளது என்று கூறுவது  அர்த்தமற்றது என்கிறார் இந்தக் கோயிலின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர்.

இந்தக் கோயிலில் பிறந்தநாள் கேக்கும் தயாரிக்கப்பட்டு வருகிறது. பிரசாத கேக்குகளை பக்தர்களின் வீடுதேடி சென்று வழங்க  பக்தர்களின் முழு விபரங்களை கணினியில் பதிவு செய்து வைத்துள்ளனர்.