மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அஜந்தா குகை அருகே செல்ஃபி எடுத்த 30 வயது வாலிபர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்தார்.

சோய்கான் தாலுகாவில் உள்ள நந்தண்டாவில் வசிக்கும் கோபால் சவான், தனது நண்பர்கள் நான்கு பேருடன் ஞாயிற்றுக்கிழமை அஜந்தா குகைகளை சுற்றிப் பார்க்கச் சென்றார்.

அஜந்தா குகைகளுக்கு எதிரே உள்ள வியூ பாயின்ட் நீர்வீழ்ச்சி அருகே செல்ஃபி எடுக்கும்போது அவர் கால் தவறி 2000 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து தொல்லியல் துறை அதிகாரிகள் மூலம் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தரப்பட்டதை அடுத்து அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் அந்த வாலிபரை உயிருடன் மீட்டனர்.

செல்ஃபி மோகம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் நிலையில் ஆபத்தை உணராமல் நினைத்த இடத்தில் செல்ஃபி எடுப்பதை அடுத்து ரயில் தண்டவாளம், நீர்வீழ்ச்சி, கடற்கரை என்று பல இடங்களில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து இதுபோன்று ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுப்பது தற்கொலை முயற்சிக்கு இணையாக கருதி இதில் ஈடுபடுபவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கவும் தகுந்த சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கவும் முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.