கட்டுரையாளர்: ஆசிரியர் கஸ்தூரிரங்கன்
அரசுத்தேர்வின் பல பணிநிலைகளில் பணியாற்றியிருக்கிறேன். தேர்வுக்காக மாணவர்களுக்கு தரப்படும் அழுத்தத்தைவிட தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தரப்படும் அழுத்தம் அதிகமாக இருந்த காலங்கள் உண்டு.
எத்துணை அழுத்தம் கொடுத்தாலும் “தேர்வுப்பணியா, என் சர்வீஸ்ல நான் பார்த்ததே இல்லையே” என்று சொல்வோரும் உண்டு.
யார் எப்படி இருந்தால் என்ன நமக்களிக்கப்பட்ட பணியை நன்றாக செய்வோம் என்று சொல்கிற ஆசிரிய தொகுதி ஒன்று இருப்பதால் இதுவரை தேர்வுப்பணிகள் பின்னடைவு இல்லாமல் இருக்கிறது.
இன்றைய தேர்வின் பொழுது ஒரு அனுபவம்.
ஸ்க்ரைப் வேண்டும் என்று கோரி தனி அறைகளில் தங்களின் ஸ்க்ரைப்களோடு மூன்று மாணவர்கள் எழுதினார்கள்.
எனக்கு இவர்கள் குறித்து எந்த கவனமும் இல்லை. பொதுவாக தேர்ச்சி விகிதத்தை கேள்விக்குறியாக்கும் மாணவர்கள் கற்றல் திறன் குறைந்தவர்களாக இருந்தால் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவருக்கு தேர்வறை உதவியாளர் ஒருவர் வழங்கப்படுவார்.
மாணவர்கள் சொல்ல சொல்ல உதவியாளர் எழுத வேண்டும்.
விழிப்புணர்வு பெற்ற பெற்றோர், தனியார் பள்ளிகளில் இதுபோன்று எல்.டி என்று சான்றை வாங்க போராடும் விஷயம் எனக்குத் தெரியும். இதுபோன்ற மாணவர்களுக்கு அறிவியல் செய்முறைத் தேர்வில் இருந்து விலக்கும், அவர்கள் சொல்வதை எழுதுவதற்கு ஒரு ஆசிரியரும் நியமிக்கப்படுவார்கள்.
என்னுடைய புரிதலில் தங்கள் பள்ளி தேர்ச்சி சதவிகிதத்தை காப்பாற்றுவதற்காக விவரமான ஆசிரியர்கள் யாரோ இந்த ஓட்டையை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றுதான் நினைத்தேன்.
அதனால் அந்த மூன்று மாணவர்கள் எழுதிக்கொண்டிருந்த பகுதிக்கு செல்லவே இல்லை. எல்லா பரபரப்பான வேலைகளையும் முடிந்த பின்னர் ஏன் போய் பார்த்தால்தான் என்ன என்கிற எண்ணம் எழுந்தது.
சென்றேன்.
இரண்டு மாணவர்கள், ஒரு மாணவி, அவர்கள் சொல்வதை எழுத மூன்று அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என ஆறுபேர் ஒரு பெரிய அறையில் பெரும் இடைவெளிகளில் இருந்தார்கள்.
உள்ளே நுழைந்த சில வினாடிகளிலேயே ஒரு சங்கடத்தை உணர்ந்தேன்.
மூவருமே உடல்திறன், கற்றல் திறன் சவாலுள்ள மாணவர்கள்.
அவர்கள் பயிலும் பள்ளியின் ஆசிரிய பெருமக்களுக்கு உண்மையில் பெரிய மனது. தங்கள் தேர்ச்சி சதவிகிதம் குறையும் என்பதையும் கடந்து, இத்தகைய மாணவர்களுக்கு கல்வியை தொடர, அரசு பொதுத்தேர்வை எழுத வாய்ப்பளித்திருக்கிறார்கள்.
இந்த முடிவை எல்லோரும் எளிதாக எடுக்கமுடியாது.
அந்த ஆகப் பழைய, அதி குரூரமான கேள்விதான் எழும்.
இதெல்லாம் பரிட்சை எழுதி என்ன பண்ண போகுது.
ஒரு மார்க் வாங்கும்.
இதுக்கு எட்மாஸ்டர் மீட்டிங்கில் நம்ம எச்.எம் எந்திருச்சு நின்னு விளக்கம் கொடுக்கணும்.
வெரட்டிவிடுங்க என்பதுதான் “புத்திசாலியான, பாதுகாப்புணர்வு” மிக்க ஆசிரியர்களின் சாய்ஸ்சாக இருக்கும்.
இவற்றையெல்லாம் நன்கு அறிந்தும், அந்த மாணவர்களின் பள்ளி ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் உரிய சான்றுகளை பெற்று, தனியறையில் தேர்வு உதவி ஆசிரியருடன் தேர்வை எழுதும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருப்பார்கள். மழை மனிதர்கள்தான்.
ஒரு குழந்தை எல்.டி என்று சான்று வாங்க நீங்கள் எத்துணை முறை அரசு பொது மருத்துவமனைக்கு வரவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாது.
எத்துணை மலைகளை கடந்து, கடல்களை நீந்தி இந்த சலுகையை பெற வேண்டும் என்பது புரிந்தால்தான் அந்த ஆசிரியர்களின் மகத்துவம் புரியும்.
இதல்லாம் சரி
உண்மையில் தேர்வறையில் என்ன நடக்கிறது என்றால் இது நாணயத்தின் இன்னொரு பக்கம்.
நான் பார்த்த பொழுது அந்த பெண் தனக்கு நியமிக்கபட்ட ஆசிரியரை எப்படி அழைக்க வேண்டும் என்று கூட தெரியாமல் “சொன்னதை எழுத்தீட்டியா?” என்றாள்.
கோபப்பட வேலை இல்லை. அவள் நிலை அதுதான்.
அவள் வீட்டில் இவள்மட்டுமே இப்படி. மூத்தவள் கல்லூரியில், இளையவள் பதினொன்றாம் வகுப்பில். ஏதோ இவள் நேரம் இவள் மட்டும் இப்படி.
மிக மிக பரிதாபத்திற்குரிய மாணவர்களாகத்தான் இருந்தார்கள்.
அந்த மாணவியிடம் பதில்களை கேட்டு எழுதிக்கொண்டிருந்த ஆசிரியரிடம் சொன்னேன்.
“உங்கள் பணிக்காலத்தில், உங்களால் முடிந்த ஆகப்பெரும் சேவையை செய்துகொண்டிருக்கிறீர்கள்”
மிகுந்த புரிதலுடன் அந்த மாணவி பயன்படுத்தும் ஒருமை பதங்களை கண்டுகொள்ளாமல் அவள் சொல்கிற பதில்களை மட்டும் எழுதிக்கொண்டிருந்த அந்த இளம் ஆசிரியரை கண்கள் பணிக்க பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அரசுப்பள்ளிகளைத் தவிர, அரசுப்பள்ளி ஆசிரியர்களைத் தவிர வேறு யார் இத்தகு மாணவர்களுக்கு அவர்கள் வீட்டின் அருகிலேயே இதுபோன்ற சேவையைத் தர முடியும் என்ற கேள்வியோடு நகர்ந்தேன்.
ஹார்ன் ..
தேர்வு மையத்தில் மென்மையாக நுழைந்தது ஒரு இண்டிகா.
மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் மையச் சோதனைக்காக வந்திருந்தார்.
பணிகள் தொடர்கின்றன.