பெரிந்தலமன்னா, கேரளா

தூக்கு தண்டனை பெற்ற கணவரின் தண்டனையை நிறுத்த கேரளாவிலுள்ள கொல்லப்பட்டவரின் குடும்பத்திடம்   மன்னிப்பு கோரி ஒரு தமிழ்ப் பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 2004ஆன் ஆண்டு பெருமழக்காலம் என்றொரு மலையாளப்படம் வந்தது.  அந்த கதையில் மீரா ஜாஸ்மினின் கணவர் காவியா மாதவனின் கணவரை தற்செயலாக கொன்று விட அவருக்கு மரணதண்டனை துபாய் நீதிமன்றத்தில் வழங்கப்படுகிறது.   அதற்காக மீரா தன் கணவரை மன்னிக்குமாறு காவியாவை வேண்டுகிறார்.    இது சினிமாக்கதையாக வந்து பலரையும் கவர்ந்தது.    ஆனால் அதே கதை இப்போது நிஜமாகி உள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த 37 வயதுப் பெண் மாலதி.  இவர் கணவர் அர்ஜுன் குவைத்தில் பணி புரிந்த போது அவருடன் தங்கி இருந்தார் கேரளா பெரிந்தலமன்னாவை சேர்ந்த நௌஃபல்.   இருவருக்கும் ஒரு நாள் எதேச்சையாக நடந்த வாய்ச்சண்டை கைகலப்பாக மாறி,  கோவத்தில் தற்செயலாக அர்ஜுன் நௌஃபலை கத்தியால் குத்தி நௌஃபல் மரணம் அடைந்தார்.   இது கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்றது.   இந்த கொலை வழக்கில் அர்ஜுனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.    அந்த தண்டனை இன்னும் 10 நாட்களில் நிறைவேற்றப்பட உள்ளது.

ஷரியத் சட்டப்படி கொல்லப்பட்டவரின் நெருங்கிய உறவினரான மனைவி அல்லது தாயார் கொலை செய்தவரை மன்னித்தால் மரணதண்டனை வழங்கப்படமாட்டாது.  இதனால் மாலதி தன் கணவரை மன்னிக்குமாறு நௌஃபல் குடும்பத்தினருக்கு பல வேண்டுகோள் விடுத்தார்.   ஆனால் அவர்கள் அதை செவி சாய்க்க்கவில்லை.   அதனால் தனது கணவரைக் காப்பாற்ற கடைசி வழியாக நேராக கேரளாவில் நௌஃபல் குடும்பத்தாரை நேரடியாக சந்தித்து தனது கோரிக்கையை கூறி உள்ளார்.

அங்கு வந்த மாலதிக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.    நௌஃபல் க்கு மனைவியும் 13 வயதான மகளும் உள்ளனர்.   அவர்கள் இப்போது ஏழ்மையில் உள்ளனர்.   அந்த குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் நபர் நௌஃபல்.    அதிகம் படிக்காத நௌஃபலின் மனைவியால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை.   வாடகை வீட்டில் உண்ண உணவுக்கும் அக்கம்பக்கத்தினரும், உறவினரும் உதவும் வகையில் உள்ளனர்.

எனவே அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக ரூ.30 லட்சம் கொடுத்தால் மன்னிப்பு கடிதம் தருவதாக நௌஃபலின் மனைவி கூறியுள்ளார்.    ஆனால் மாலதியிடமும் பணம் இல்லை.  தன்னிடமுள்ள ஒரே சொத்தான தனது வீட்டை விற்று அதில் வரும் ரூ.10 லட்சத்தையும் நௌஃபல் மனைவிக்கு தர தயாராக உள்ளார் மாலதி.    ஆனால் பாக்கி பணத்தை எப்படி தருவது என குழப்பத்தில் உள்ளார்.    மீடியாக்களின் மூலமாக தனது கோரிக்கையை வெளிப்படுத்தி  நௌஃபலின் மனைவி எடுக்கப்போகும் முடிவுக்காக காத்திருக்கிறார் மாலதி,