சென்னை: சென்னை தி.நகரில் அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறையை கடைபிடிக்காத பிரபல வணிக நிறுவனத்துக்கு ‘சீல்’ சென்னை மாநகராட்சி அதிரடியாக சீல் வைத்தது. இது வணிகர்களி டையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சில மாதங்கள் மூடப்பட்டிருந்த வணிக நிறுவனங்கள் மீண்டும் திறக்க மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கின. அத்துடன் முக்கவசம் மற்றும் தனி மனித இடைவெளி, மேலும், கடைகளில் கூடுதல் ஊழியர்களை வைத்து கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை ஒழுங்குபடுத்த வேண்டும். ஒவ்வொரு கடையின் வெளியில் கொரானா தொடர்பான எச்சரிக்கை வாசகங்களை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதுடன், வணிகர்கள் உரிய நெறிமுறைகளையும் வழிகாட்டுதலையும் பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், பல வணிக நிறுவனங்களில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் ஏதும பின்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கடந்த இரு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்துள்ளதால், சென்னை திநகர் உள்பட பல பகுதிகளில் உள்ள நகைகக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், ஐப்பசி மாதம் பிறந்துள்ளதால், திருமணங்களுக்கு நகை, ஜவுளிகள், பாத்திரங்கள் என அனைத்து தேவைகளுக்கும் பொதுமக்கள் தி.நகரில் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தி.நகரில் உள்ள கடைகளில் கூட்டம் நிரம்பி வழிவது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சென்னை தி.நகர் பகுதிக்கு சென்று வணிக நிறுவனங்களில் ஆய்வு நடத்தினர். அப்போது அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்காத ஒரு வணிக நிறுவனத்தை மூடி, அதிகாரிகள் சீல் வைத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளளது.
மேலும, வணிக நிறுவனங்கள் அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி, தி.நகரில் ஒரு கடை இன்று பூட்டப்பட்டு #சீல் செய்யப்பட்டுள்ளது, ஏனெனில், அந்த கடை கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றும், அங்கு கூட்ட நெரிசல் இருந்ததால், அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.
மேலும், அரசின் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றாத இதுபோன்ற பிற கடைகளும் சீல் வைக்கப்படும். கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என எச்சரித்துள்ளது.
இதுகுறித்து டிவிட்பதிவிட்டுள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், டி நகரில் உள்ள ஒரு கடையில் பெரும் கூட்டத்தைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து, சென்னை கார்ப்பரேசன் உடனடி நடவடிக்கை எடுத்து கடைக்கு சீல் வைத்துள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அனைத்து கடைகளையும் கடைக்காரர்களையும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்து உள்ளார்.
சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை வணிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.