வாஷிங்டன்
இந்திய செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையால் உண்டான குப்பைகள் தீப்பிடித்து எரிந்துவிடும் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் இந்தியா தனது சொந்த செயற்கைக் கோளை ஏ சாட் ஏவுகணை சோதனையில் தகர்த்தது. இந்த செயற்கைக் கோள் தூள் தூளாக நொறுங்கியது. இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவித்தார். அமெரிக்கா மற்றும் சீனா வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
ஆனால் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இந்த ஏ சாட் சோதனையால் விண்வெளியில் செயற்கைக் கோள் வெடித்து சிதறிய குப்பைகள் மிதந்து வருவதாக தெரிவித்தது. அத்துடன் இந்த குப்பைகளால் அடுத்து ஏவப்படும் செயற்கைக் கோள்கள் பாதிப்படையும் எனவும் கூறப்பட்டது.
மேலும் ஏ சாட் ஏவுகணை சோதனையில் உண்டான குப்பைகள் சர்வதேச விண்வெளி நிலையத்தின்பாதையில் மிதப்பதால் பல அபாய விளைவுகள் நேரலாம் என கூறிய நாசா இவைகள் குறித்து எவ்வித யோசனையும் இன்றி இந்தியா ஏ சாட் ஏவுகணை சோதனை நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் தலைவரும் பாதுகாப்பு செயலருமான பாட்ரிக் ஷாநகான், “இந்திய ஏவுகணையால் உண்டான குப்பைகள் விண்வெளியில் மிதந்து வருவது உண்மைதான். ஆனால் அவை விரைவில் தீப்பிடித்து எரிந்து விடும்.
முன்பு சீனா இது போல ஒரு சோதனையை நிகழ்த்திய போது அந்த சோதனை 500 மைல் அதாவது 800 கிமீ உயரத்தில் நடத்தப்பட்டது. ஆனால் இந்தியா தனது சோதனையை 186 மைல் அதாவது 300 கிமீ உயரத்தில் நடத்தி உள்ளது. இவ்வளவு தாழ்வான இடத்தில் சோதனை நிகழ்த்தியதை இந்தியா தவிர்த்திருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
இந்திய விஞ்ஞானிகள் பலரும் இந்த குப்பைகள் 45 தினங்களில் தீப்பிடித்து எரிந்து விடும் என கூறி உள்ளனார்.