சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தவர்களின் வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதில், நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா இ சேலம் திமுக வேட்பாளர் செல்வ கணபதியின் வேட்பு மனுக்ள நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே வடசென்னை தேர்தல் அலுவலகத்தில் திமுக, அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு திமுக, அதிமுகவினரின் வேட்புமனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் மார்ச் 20ந்தேதி முதல் 27ந்தேதி வரை வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது. இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா, அ.தி.மு.க. சார்பில் லோகேஷ், பா.ஜ.க. சார்பில் எல்.முருகன், நாம் தமிழர் ஆ.ஜெயகுமார் ஆகியோர் வேட்பாளர் களாக களமிறங்கியுள்ளனர்.
இவர்கள் மனுமீதான பரிசீலனை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், திமுக வேட்பாளர் ராசா மற்றும் அதிமுக வேட்பாளர் தமிழ்செல்வன் மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. வேட்புமனுக்களில் குளறுபடி இருப்பதாக கூறி மனுக்களை தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில், பாஜக வேட்பாளர் எல்.முருகன் மனு ஏற்கப்பட்டு உள்ளது.
இதுபோல சேலம் தொகுதியில் வேட்பு மனுவை பரிசீலனை செய்து வரும் தேர்தல் அதிகாரி சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
செல்வகணபதிக்கு 2 இடங்களில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறி வேட்பு மனு மீதான பரிசீலனையை தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்துள்ளார்.
அதேபோல் வடசென்னை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் மனோ ஆகியோரின் வேட்புமனுக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.