சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசாவின் தனிப்பட்ட தாக்குதல், அருவறுப்பான பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து, முதல்வர் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில் ஆ.ராசாவின் அருவறுப்பான பேச்சுக்கு திமுக எம்.பி.யும் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தல் இதுவரை இல்லாத அளவுக்கு திமுகவுக்கு வாழ்வா, சாவா என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சி கைப்பற்றும் நோக்கில் அதிதீவிரமாக பணியாற்றி வரும் திமுக, வாக்காளர்களை கவரும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிட்டு, வாக்கு சேகரித்து வருகிறது. அதுபோல, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அதிமுகவும் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. தனிமனித தாக்குதல்களும் தீவிரமடைந்துள்ளன. இது மக்களிடையே அனுதாபத்தை பெறுவதற்கு பதிலாக அதிருப்திகளையே ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், சமீபத்தில் தேர்தல் பிரசார மேடையில் தி.மு.க., துணை பொதுச் செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, பேசிய பேச்சு அருவறுப்பின் உச்சக்கட்டமாக திகழ்ந்துள்ளது. அவரது பேச்சில், 10 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகத்தில் இருட்டுக்கு பின், விடியல் வேண்டும். கருணாநிதி ஆட்சி வர, ஸ்டாலின் முதல்வராக வேண்டும்’ என்கிறோம். ஆனால், இபிஎஸ்சோ, ’10 ஆண்டு நல்லாட்சி தொடர எனக்கு வாக்களியுங்கள் என்ற கூறுகிறார்…
ஸ்டாலின் இபிஎஸ் இருவரையும் எடை போட்டு பார்ப்போம். ஜனநாயகத்தை காப்பாற்ற, சிறையில் இருந்தவர் ஸ்டாலின். கட்சியில், மாவட்ட பிரதிநிதி,பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என, படிப்படியாக உயர்ந்து, தலைவரானார். ஆட்சி நிர்வாகத்திலும், எம்.எல்.ஏ., மேயர், உள்ளாட்சி துறை அமைச்சர், துணை முதல்வர் என, உயர்ந்தார். இப்போது, முதல்வராகப் போகிறார். அவர் யாராலும் திணிக்கப்பட்டவர்அல்ல. முறைப்படி பெண் பார்த்து நிச்சயம் செய்து, திருமணம் நடத்தி, சாந்தி முகூர்த்தம் நடத்தி, 300 நாட்கள் கழித்து, சுகப் பிரசவத்தில் பிறந்தவர் ஸ்டாலின்.
ஆனால், ஜெயலலிதா இறக்கும் வரை, இபிஎஸ்.சை யாருக்கும் தெரியாது. இவர், ஊர்ந்து போய் முதல்வரானார். இபி.ஸ்சுக்கு என்ன தகுதி, தியாகம் இருக்கிறது; பொது வாழ்வில், அவர் எட்டியிருக்கிற தொலைவு என்ன; ஒன்றும் கிடையாது
நல்ல உறவில், ஆரோக்கியமாக சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறை பிரசவம், இ.பி.எஸ்.,நல்ல குழந்தைக்கு தாய்ப்பால் போதும். தமிழகம் தான் அவருக்கு தாய். குறை பிரசவ குழந்தையை காப்பாற்ற, டில்லியில் இருந்து மோடி என்ற, டாக்டர் வருகிறார். இந்த ஊழல் ஆட்சியை, மோடி காப்பாற்றுகிறார் என்று பேசியிருந்தார்.
ஆ.ராசாவின் அருவறுப்பான, தரங்கெட்ட பேச்சு தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவுக்கு தமிழக மக்களிடையே செல்வாக்கு உயர்ந்து வரும் வேளையில், ஆ.ராசா போன்றோரின் தரங்கெட்ட பேச்சு, திமுகவுக்கு அவப்பெயர் மட்டுமின்றி, தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என சமூக வலைதளங்களில் திமுக அனுதாபிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
அதிமுக அனுதாபிகளோ, ஆ.ராசாவின் பேச்சு அத்துமீறியது. இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று ஆவேசமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பல நடுநிலையாளர்களோ, ஆ.ராசாவின் பேச்சு, திமுகவுக்கே அவப்பெயரை ஏற்படுத்தும், ஸ்டாலின் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
முதல்வர் பழனிச்சாமியின்தாயார் தவுசாயம்மாள் மறைவு குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், திமுக முன்னணியினர் எடப்பாடியின் வீட்டுக்கு சென்று மரியாதை செய்த நிலையில், ஆ.ராசா இவ்வாறாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருவர் மீது உள்ள கோபம் காரணமாக, அவரது மறைந்த தாயாரை விமர்சிப்பது கேவலமான ஒரு செயல். இதன்மூலம் அரசியல்வாதிகளின் எண்ணம் எந்த அளவுக்கு கீழ்த்தரமாக உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
ஆ.ராசாவின் பேச்சால் மனமுடைந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது நண்பர்களிடமும், உறவினர்களிடமும், தனது தாயார் குறித்து அருவறுப்பாக விமர்சித்ததை கூறி கண்ணீர் வடித்ததாக கூறப்படுகிறது. காலம் முழுதும் காடு கழனியில் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து இறந்துபோன என் தாயைப்பற்றி இப்படி ஒரு அவச்சொல் சொல்ல அ.ராசாவிற்கு எப்படி மனசு வந்தது ? பதவி வெறி இப்படி எல்லாமா ஒரு மனிதனை பேச வைக்கும் என நொந்துபோனதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் சார்பில் கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஆ.ராசாவின் பேச்சுக்கு அருவறுப்பான பேச்சுக்கு, தி.மு.க., மகளிரணி தலைவியும், எம்.பி.,யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். ‘அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும், பெண்களை இழிவுபடுத்தி, தனிப்பட்ட முறையில், விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லாருமே, மனதில் வைத்துக் கொண்டால், இந்த சமூகத்திற்கு நல்லது. இது தான் திராவிட இயக்கமும், ஈ.வெ.ரா.,வும் விரும்பிய சமூக நீதி’ என, கனிமொழி கூறியுள்ளார்.