சென்னை: 3 கிரகங்கள் அருகருகே வானில் தோன்றும் அரிய நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வானது இன்றும், நாளையும் வானில் தெரியும் என்பதால், பொதுமக்கள் அதை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று வானியல் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
வானில் இன்றும், நாளையும் சந்திரன், செவ்வாய், வெள்ளி நெருங்கி தோன்றும் அரிய நிகழ்வு இன்றும் நாளையும் ( ஜூலை 12, 13-ம் தேதிகளில் ) நடைபெறுகிறது. மேற்கு வானில் சூரியன் மறைந்த பிறகு சுமார் 45 நிமிடங்கள் கழித்து இந்த நிகழ்வை காணலாம்.
இந்த நிகழ்வின்போது, செவ்வாய் மற்றும் வெள்ளி கோள்களுக்கு இடையே 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும். வெள்ளி, செவ்வாய் கோள்கள் கடக்கும் போது அருகே சந்திரன் தென்படும். மிக அற்புதமான இந்த காட்சியை வெறும் கண்களால் பார்க்கலாம். கோள்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதையும் இன்று முதல் காண முடியும் என இந்திய வான் இயற்பியல் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இதுபோன்ற ஒரு நிகழ்வு 2019 ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடைபெற்றதாகவும், ஆனால், அதை காண முடியவில்லை என்று தெரிவித்துள்ள வானியல் நிறுவனம், இதுபோன்ற அடுத்த நிகழ்வு 2024 பிப்ரவரி 22 ஆம் தேதி தென்படும். ஆனால், அப்போதும் தெளிவாக காண்பது சந்தேகம், ஆனால், அதேசமயம், இன்றைய நிகழ்வு போல மிக நெருக்கமான நிகழ்வை காண்பதற்கு 2034 மே 11ம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.