கோவை

முன்னாள் தொலை தொடர்புத்துரை அமைச்சர் ஆ ராசா 2 ஜி தீர்ப்பு பற்றி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2 ஜி வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான ஆ ராசா  உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து தீர்ப்பு அளித்தது.   தற்போது கோவை மற்றும் ஊட்டி பகுதியில் ராசா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  தனது பயணத்தின் இடையே ஒரு ஆங்கில நாளிதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.

அவர் தனது பேட்டியில், “முந்தைய தேர்தல்களில் 2 ஜி வழக்கால் பல தேர்தல்களில் திமுக தோல்வி அடைந்துள்ளது.  ஆனால் இனி இந்த தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும்.   நான் அமைச்சராகும் முன்பே 2 ஜி அலைக்கற்றை இருந்தது.   ஆனால் அது சாமான்ய மக்களால் பயன்படுத்த முடியாத அளவுக்கு விலையில் இருந்தது.   நான் அப்போது எடுத்த புரட்சிகரமான நடவடிக்கைகள் மூலம் அது சாமானியரையும் சென்றடைந்தது.   பொருளாதார ரீதியில் மிகத் தாழ்மையான நிலையில் உள்ள ஒருவரும் இன்று மொபைல் மூலம் இணையத்தை பயன்படுத்த முடிவது இந்த ராசாவாலும் திமுகவாலும் மட்டுமே சாத்தியம் ஆயிற்று.

நான் தொலை தொடர்பு சாம்ராஜ்யங்களின் கூட்டமைப்பை உடைக்க முற்பட்டு அதில் வெற்றியும் அடைந்தேன்.  தொலைபேசிக் கட்டணங்கள் வெகுவாக குறைந்தன.  முன்பு எப்போதும் இல்லாத அளவு வளர்ச்சியை தொலை தொடர்புத் துறை அடைந்தது.   இதை அப்போதைய குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.   ஆனல் நான் குற்றவாளியாக முத்திரை குத்தப்பட்டேன்.  எது எப்படி இருப்பினும் 3ஜி மற்றும் 4 ஜி அறிமுகத்துக்கு நாங்களே காரணமாக இருந்தோம்.   நான் எழுதிவரும் புத்தகத்தில் இது குறித்து விளக்கி உள்ளேன்

சமீபத்திய ஆர் கே நகர் இடத்தேர்தலில் திமுக தோல்வி குறித்து கட்சி மேலிடம் அமைத்துள்ள குழு ஆராய்ந்து முடிவெடுக்கும்.   அதற்கு முன் நான் கருத்துச் சொல்வது சரியில்லை.   அதே போல ஸ்டாலின் பற்றிய அழகிரியின் கருத்து குறித்து நீங்கள் கட்சி தலைமையைக் கேட்க வேண்டும்.  எனக்கு இது குறித்து பதிலளிக்க விருப்பமில்லை” என கூறி உள்ளார்.