ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழி கொண்டுவரப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற அலுவல் மொழி ஆய்வுக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.

அமித் ஷா-வின் இந்த பேச்சு இந்தி அல்லாத பிற மாநில மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ள ‘தமிழணங்கு’ என்ற பதிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழின் சிறப்பு எழுத்தான ‘ழ’கரம் ஏந்தி காளியாக ‘தமிழணங்கு’ தாண்டவமாட “இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!” என்ற பாரதிதாசனின் வரிகளை பதிவிட்டுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

ஏ.ஆர். ரஹ்மான் பொதுவாக தனது அரசியல் சார்பு நிலை குறித்தோ பொது விவாதங்களிலோ எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கமாட்டார் என்ற நிலையில் அவரது இந்த ஒற்றைப் பதிவு பலரையும் திகிலடைய வைத்திருக்கிறது.

அமித் ஷாவின் இந்தி குறித்த பேச்சுக்கு “ஒற்றைத் தன்மை ஒருமைப்பாட்டை உருவாக்காது, ஒற்றை மொழி ஒற்றுமைக்கு உதவாது. இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை தொடர்ந்து செய்து வரும் பாஜக தலைமை அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று எச்சரித்தார்.

இந்த நிலையில், பாரதிதாசன் வரிகளுடன் ஏ.ஆர். ரஹ்மானின் இந்த பதிவு சும்மா இருந்த சங்கை மீண்டும் ஊதிய கதையாக பா.ஜ.க.வுக்கு தலைவலியை உண்டாக்கி உள்ளது.