சென்னை:
தொலைக்காட்சி நேரலையில், நெறியாளரைப் பார்த்து, “உங்க மனைவி உங்க கூட வாழறாங்களா.. இல்லே வெளியிலே போயிட்டாங்களா என்று நான் கேட்டால் எப்படி இருக்கும்” என்று அதிமுக பிரமுகர் கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நியூஸ் 7 தொலைக்காட்சியில் நேற்று இரவு, “யாருடைய குரலாய் ஒலிக்கிறார் மதுசூதனன்?” என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. நெல்லசன் நெறியாள்கை செய்தார்.
இந்த விவாதத்தில் தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன், அ.தி.மு.க. பிரமுகர் கோவை செல்வராஜ், அரசியல் விமர்சகர் ரவீந்திரன், பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த மதுசூதனன், தனது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு எழுதிய கடிதம் பற்றி விவாதம் நடந்தது.
தனது தோல்விக்குக் காரணமான அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுசூதனன் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது பற்றி விவாதம் நடந்தபோது, ஜெயலலிதா காலத்தில் இப்படியோர் தோல்வி ஏற்பட்டிருந்தால் எந்தமாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்பது குறித்தும் விவாதம் தொடர்ந்தது.
அப்போது அதிமுக சார்பில் விவாதத்தில் கலந்துகொண்ட கோவை செல்வராஜ், நெறியாளர் நெல்சனை நோக்கி, “இது எங்கள் உட்கட்சி விவகாரம். இது பற்றி நீங்கள் பேசக்கூடாது. உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்தெல்லாம் நான் கேட்டால் தவறுதானே” என்றார்.
மேலும் நெறியாளுநர் நெல்சனிடம், “உங்கள் மனைவி உங்களுடன் வாழ்கிறாரா.. இல்லை வெளியேறிவிட்டாரா என்றெல்லாம் நான் கேட்டால் எப்படி இருக்கும்” என்றார்.
இதனால் நெறியாளுநரும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
நெறியாளுநர் நெல்சன், விநாடி நேரத்தில் சுதாரித்து தொடர்ந்து விவாதத்தை நடத்தி முடித்தார்.
பொது இடங்களில் கூட இவ்வளவு அநாகரீகமாக பேசுபவர்களை, கட்சியின் அதிகாரப்பூர்வ பேச்சாளராக – தொ.கா. விவாதங்களில் கலந்துகொள்பவராக நியமிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.