சென்னை: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்த நிலையில், மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவத்து உள்ளது. இதன் காரணமாக, 16ந்தேதிக்கு பிறகு ஒரு வாரம் கன மழைக்கு வாயப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நிலப்பகுதியை அடைந்ததையடுத்து வலுவிழந்து காணப்படுகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது. இருந்தாலும், 3 நாள் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தமிழக உள் மாவட்டங்கள், கேரளா வழியாக மேற்கு – வடமேற்கு திசையில் அரபிக்கடல் நோக்கி நகர்கிறது. இது தென்கிழக்கு ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொள்ளும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வடகடலோர தமிழக மாவட்டம், புதுச்சேரி பகுதிகளில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வரும் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதிக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழகம் கேரளா மற்றும் புதுவையில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது