டில்லி:

ராஜ்யசபாவில் சச்சின் டெண்டுல்கள் பேசுகையில் இடையூறு ஏற்படுத்தியது அவமானகரமான செயல் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டார். நாட்டின் விளையாட்டுத்துறை பற்றி அவர் ராஜ்யசபாவில் இன்று பேசவிருந்தார்.

அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனால் டெண்டுல்கரால் பேச முடியாமல் போனது. அமளி காரணமாக ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

சச்சின் தெண்டுல்கர் பேசுகையில் இடையூறு ஏற்படுத்திய விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் பேசுகையில், “சச்சின் டெண்டுல்கர் உலக அரங்கில் இந்தியாவிற்காக பெருமையை சேர்த்தவர், ஆனால் இப்போது நடக்கும் சம்பவம் அவமானக்கரமானது. அவரை பேச அனுமதித்து இருக்க வேண்டும், இன்று என்ன பேச போகிறோம் என்பது தொடர்பாக எல்லோருக்கும் தெரியும். அவரை பேச அனுமதித்திருக்க வேண்டும். அரசியல்வாதிகளை மட்டும்தான் பேச அனுமதிக்கப்படுமா?” என்றார்.

மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் பேசுகையில், “சச்சின் டெண்டுல்கரை பேசவிடாமல் செய்த காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம். ராஜ்யசபா சபாநாயகர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டது சரியல்ல’’ என்றார்.