டெல்லி: வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடகிழக்குப் பருவமழை ஓரிரு நாள்களில் தீவிரமடையும் என்றும் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் மிக மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், நவம்பர் 19-ம் தேதி அந்தமான கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (நவம்பர் 16ஆம் தேதி) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 17ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 18ஆம் தேதி கன்னியாகுமரி, நெலலை, தூத்துக்குடி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.