திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று பிற்பகல் சுமார் 3:30 மணி அளவில் சிறுத்தை ஒன்று நடமாடியது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து பார்த்தபோது சிறுத்தை பதுங்கி இருந்ததை அடுத்து மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நகர்ப்பகுதிக்குள் சிறுத்தை வர வாய்ப்பில்லை என்று கருதினர்.

அப்போது திடீரென்று ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் இருந்து ஓடிய சிறுத்தை அருகில் இருந்த தனியார் பள்ளி ஒன்றின் மதில் சுவரை ஏறிக் குதித்து பள்ளிக்குள் புகுந்தது.

சிறுத்தை செல்லும் வழியில் பள்ளியின் மதில்சுவரில் பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்த முதியவரை தாக்கி காயப்படுத்தியது.

இதனை அடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

பள்ளிக்குள் சிறுத்தை புகுந்ததை அடுத்து அலறியடித்த பள்ளி மாணவிகள் வகுப்பறையை உள்ளிருந்து தாழிட அறிவுறுத்தப்பட்டனர்.

பள்ளிக்குள் சிறுத்தை புகுந்த தகவல் திருப்பத்தூர் நகரம் முழுவதும் தீயாய் பரவியதை அடுத்து பெற்றோர்கள் பள்ளி முன் குவிந்தனர்.

https://x.com/supriyasahuias/status/1801807028429668610

பின்னர் சிறிது நேரம் இங்குமங்கும் போக்குக்காட்டிய சிறுத்தை நீண்ட நேரம் கழித்து பள்ளியை விட்டு வெளியேறி அருகில் இருந்த கார் நிறுத்தத்துக்குள் நுழைந்தது.

சிறுத்தை வெளியேறியது உறுதிப்படுத்தப்பட்ட பின் மாணவர்கள் பள்ளியில் இருந்து பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மயக்கமருந்து செலுத்தி சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர்.

பிடிபட்ட சிறுத்தையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் இன்று காலை விடுவித்தனர்.