நொய்டா:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரத்தில் உள்ள பிரபலமான மெட்ரோ மருத்துவ மனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை 35 நோயாளிகள் மீட்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நோயாளிகளை மீட்பதிலும், தீயை கட்டுப்படுத்துவதிலும் தீயணைப்பு அதிகாரிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் பலமாடி கொண்ட மெட்ரோ மருத்துவமனை மற்றும் இதய நோய்க்கான பிரத்யேக பிரிவும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இன்று காலை திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் அனைவரும் பதறியடித்து ஓடினார்.
மருத்துவமனையின் 3 வது மற்றும் 4 வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து 4 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனையில், தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
தீ விபத்து காரணமாக அதிக அளவில் கரும்புகை வெளியேறியது. கட்டிடத்தின் வராண்டா மற்றும் பால்கனியில் நின்றிருந்த மக்களை மீட்பதற்காக கண்ணாடி ஜன்னல்களை உடைத்து கொண்டு மீட்பு பணியாளர்கள் சென்றனர்.
இதுவரை 35 நோயாளிகள் மீட்கப்பட்டு , வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகவும், இந்த சம்பவத்தில் காயமடைந்தோர் மற்றும் தீ விபத்துக்கான குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.