கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மற்றும் அவரது மனைவி ஆஷா முகர்ஜி இருவரும் பிரிந்து வாழும் நிலையில் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனைவியால் மனவேதனை அடைந்ததாகவும் தனது ஒரே மகனைப் பார்க்க முடியாமல் நீண்ட நாட்களாக பிரிந்து இருப்பதால் சித்திரவதை அனுபவிப்பதாகவும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழங்கிய தனது மனுவில் ஷிகர் தவான் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை ஏற்று நடைபெற்ற விசாரணையில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமோ அல்லது மறுப்போ எதையும் ஆஷா முகர்ஜி தெரிவிக்கவில்லை.

இதனையடுத்து தவான் கூறிய அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்ட பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் நீதிபதி ஹரிஷ் குமார் இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார்.

ஆஷா முகர்ஜி தனது மகனுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் நிலையில் குழந்தை யாருடன் இருக்கவேண்டும் என்பதில் எந்த ஒரு உத்தரவையும் நீதிமன்றம் வழங்கவில்லை.

அதேவேளையில், குழந்தையை இந்தியா அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆஷா முகர்ஜியைக் கண்டித்த நீதிமன்றம், பள்ளி விடுமுறையின் பாதி நாட்களில், தவான் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இரவு தங்குவது உட்பட, குழந்தையின் இந்தியா வருகையை எளிதாக்குமாறு முகர்ஜிக்கு உத்தரவிட்டது.

மேலும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளிலும் தனது மகனுடன் நேரத்தை செலவிட தவானுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக, குழந்தையின் மீது தாய்க்கு மட்டும் தனி உரிமை இல்லை என்று நீதிமன்றம் கூறியிருந்தது இதனையடுத்து இருவரும் இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் விவாகரத்து மற்றும் குழந்தை பராமரிப்பு தொடர்பாக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கினர்.

புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரராக தவானின் அந்தஸ்தை அங்கீகரித்த நீதிமன்றம், ஆஸ்திரேலியாவில் இருந்து தனது மகனை இந்தியா அழைத்து வருவதிலும் தன்னுடன் தங்கவைப்பதிலும் வேறு ஏதேனும் சிக்கல் இருந்தால் மத்திய அரசின் உதவியை நாட வலியுறுத்தியுள்ளது.