சென்னை: வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தம் உருவானது – 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் 12 மாவட்டங்களுக்கு மழை கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. மேலும் வங்ககடலில் உருவான காற்றழுத்த பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதால் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்றும் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். அதே போல சேலம், புதுக்கோட்டை, பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சி, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
12 மாவட்டங்களுக்கு மழை கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் சென்னை உள்பட மாநிலத்தின் பல மாவட்டங்களில் மழை தீவிரமாக உள்ள நிலையில்,
வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகளை விரைவுபடுத்த, 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை, தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
திருவள்ளூர் – கார்த்திகேயன், மேலாண் இயக்குநர், எல்காட்
காஞ்சிபுரம் – கந்தசாமி, மேலாண் இயக்குநர், தாட்கோ
செங்கல்பட்டு – கிரந்திகுமார் பாடி, மேலாண் இயக்குநர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்
விழுப்புரம் – ராமன், இயக்குநர், தொழிலாளர் நலத்துறை
கடலுார் – மோகன், இயக்குநர், சுரங்கம் மற்றும் கனிம வளம்
மயிலாடுதுறை – கவிதா ராமு, மேலாண் இயக்குநர், கோ – ஆப்டெக்ஸ்
திருவாரூர் – ஆனந்த், ஆணையர், ஆதிதிராவிடர் நலத்துறை
நாகப்பட்டினம் – அண்ணாதுரை, மேலாண் இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்
தஞ்சாவூர் – கிருஷ்ணன் உன்னி, நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம்
கள்ளக்குறிச்சி – வெங்கடபிரியா, செயலர், மாநில தேர்தல் ஆணையம்
அரியலுார் – விஜயலட்சுமி, ஆணையர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி
பெரம்பலுார் – லட்சுமி, ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை