டில்லி

ரேந்திர மோடியின் சிறுவயது வாழ்க்கை வரலாறு காமிக் புத்தகமாக வெளியாகி உள்ளது.

பால் நரேந்திரா என்னும் பெயரில் ஒரு காமிக் புத்தகத்தை ரானடே பிரகாஷன் மற்றும் புளூ ஸ்னெயில் அனிமேஷன் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன.  இந்த புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடியில் சிறு வயதில் நடந்த சம்பவங்கள் சித்திரக் கதைகளாக வெளியிடப் பட்டுள்ளது.  அவருடைய தைரியமான சாகசங்கள், இரக்க உணர்வு, தேசப் பற்று, குடும்பத்த்துக்கு உதவியது என பல நிகழ்வுகள் சித்திரமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தின் ஆசிரியர் யார் என வெளியிடப்படவில்லை.  45 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில், மோடி நீரில் மூழ்கிய சிறுவனைக் காப்பாற்றியது, முதலைகள் நிறைந்த நீர்நிலையில் தைரியமாக நீந்தியது, 1962ஆம் வருடத்தில் போர் வீரர்களுக்கு தேநீர் அளித்தது, தனது பள்ளியில் இருந்த விஷம மாணவர்களை சமாளித்தது, தந்தைக்கு உதவியாக தேநீர் கடையில் பணி புரிந்தது, நாடகத்தில் நடித்தது, கபடி விளையாட்டில் சிறந்து விளங்கி தன் பள்ளிக்கு வெற்றியை தேடித் தந்தது, வலையில் அகப்பட்ட பறவையை காப்பாற்றியது போன்ற செயல்கள் படமாக வெளிவந்துள்ளது.

தனது சிறு வயதில் ஒற்றை அறை உள்ள வீட்டில் ஆறு பேர்களுடன் மோடி வசித்தது மிகவும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.   ஆனால் அவருடைய சகோதரர்கள் யார் யார் என எந்தப் பெயரும் குறிப்பிடப் படவில்லை.  அவர் உணவளிக்கும் ஒரு பெண் அவர் சகோதரி என சொல்லப்பட்ட போதிலும் அவர் பெயரும் கூறப்படவில்லை.

இது பா ஜ க தொண்டர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் பா ஜ க அல்லாத சிலர், இதில் எத்தனை சதவீதம் உண்மையாக இருக்கும் என ஐயத்தையும் தெரிவித்துள்ளனர்.