சென்னை: தமிழ்நாட்டில் இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்பட வில்லை என்று கூறியுள்ள தமிழ்நாடு அரசு,  கடத்தலைத் தடுக்க தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும்  உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

கோவையைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் தாக்கல் சென்னை உயர் நீதிமன்றத்தில்,  செய்த பொது நல மனுவில், “கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னனூர், காரமடை மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் இயங்கி வரும் 300க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில், 80 சதவீத குவாரிகள் உரிய அனுமதியின்றி, சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. இந்த கல் குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் கற்கள், ஜல்லிகள், எம்.சாண்ட் போன்றவை சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இதற்கு அதிகாரிகள் உடந்தையாக செயல்படுகின்றனர்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனு குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை 24ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சார்பில்,  அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக குவாரிகள் இயங்கி வருகிறதா?’ என தாசில்தார்கள் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டின்படி, கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக குவாரிகள் எதுவும் இயங்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக கூறப்பட்ட புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, சட்ட விரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க குழுக்குள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், அந்த குழுக்கள் கடத்தலைத் தடுக்கும் வகையில் சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும்’ என்று தெரிவித்துள்ளது.